75,000 இளைஞர்களுக்கு மத்திய அரசில் பணி... நியமன கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி
75,000 இளைஞர்களை பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அரசு துறைகளில் பணியமர்த்துவற்கான வேலை வாய்ப்புக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் 75,000 இளைஞர்களுக்கு பணி நியமனத்தை இன்று பரிசாக வழங்கி உள்ளார். திங்கிள்கிழமை அன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் இளைஞர்களுடன் பிரதமர் உரையாடினார்.
இதில், 75,000 இளைஞர்களை பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அரசு துறைகளில் பணியமர்த்துவற்கான வேலை வாய்ப்புக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், தபால் துறை, உள்துறை அமைச்சகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, மத்திய புலனாய்வுப் பிரிவு, சுங்கம், வங்கி போன்றவற்றில் உள்ள பணிக்கான நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் இருந்து மத்திய அமைச்சர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஒடிசாவில் இருந்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், குஜராத்தில் இருந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சண்டிகரில் இருந்து தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மகாராஷ்டிராவில் இருந்து வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ராஜஸ்தானில் இருந்து ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் இருந்து நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உத்தரப் பிரதேசத்தில் இருந்து கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர பாண்டே, ஜார்கண்டிலிருந்து பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, பீகாரில் இருந்து பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, "கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்னைகளை தணிக்கும் நோக்கில் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு பல முனைகளிலும் செயல்படுகிறது.
உலகளாவிய நிலைமை மிகவும் நன்றாக இல்லை என்பது ஒரு உண்மை. பல பெரிய பொருளாதாரங்கள் போராடி வருகின்றன. பல நாடுகளில், உயர் பணவீக்கம் மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சனைகள் உச்சத்தில் உள்ளன. நூற்றாண்டிற்கு ஒருமுறை வரும் தொற்றுநோயின் விளைவுகள் 100 நாட்களில் நீங்காது.
ஆனால், இந்த நெருக்கடி உலகம் முழுவதும் எதிர்கொள்ளப்பட்ட போதிலும், அதன் தாக்கம் எல்லா இடங்களிலும் உணரப்படுகிறது. இந்தியா இந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் நம் நாட்டைக் காப்பாற்ற புதிய முயற்சிகளையும் சில அபாயங்களையும் எடுத்து வருகிறது. எங்கள் நாட்டில் இந்த பாதிப்பை மென்மையாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். இது ஒரு சவாலான வேலை. ஆனால், உங்கள் ஆசீர்வாதத்துடன், நாங்கள் இதுவரை பாதுகாக்கப்படுகிறோம்" என்றார்.
நாடு முழுவதிலும் இருந்து 75,000 இளைஞர்கள், மத்திய அரசின் 38 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் சேர உள்ளார்கள். குரூப் ஏ மற்றும் பி (gazetted), குரூப் பி (non-gazetted) மற்றும் குரூப் சி என பல்வேறு நிலைகளில் இளைஞர்கள் அரசாங்கத்தில் இணைய உள்ளனர்.