ராஜஸ்தானிலிருந்து எடுத்துவரப்பட்ட நாய் கறி.. ஓட்டல்களில் பதறிய கஸ்டமர்ஸ்.. நடந்தது என்ன?
பெங்களூருவில் உள்ள உணவகங்களுக்கு நாய் கறி சப்ளை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரயில் நிலையத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள உணவகங்களுக்கு நாய் கறி சப்ளை செய்யப்பட்டதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் இருந்து பெங்களூரு ஹோட்டல்களுக்கு நாயின் இறைச்சி சப்ளை செய்யப்படுவதாக நேற்று சிலர் குற்றம் சாட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓட்டல்களுக்கு சப்ளை செய்யப்பட்டது நாய் கறியா? ஆட்டிறைச்சியும் இதர இறைச்சிகளும் ரயில் மூலம் பெங்களூருக்கு சப்ளை செய்யப்படுவதாக கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு (FSSA) தகவல் கிடைத்தது. இதையடுத்து, கர்நாடக உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் போலீஸ் அதிகாரிகளும் ரயில் நிலையத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.
ஆய்வின் போது, ராஜஸ்தானில் இருந்து ரயிலில் வந்த பார்சல்கள், ரயில் நிலையத்தின் வெளிப்புற வளாகத்தில் வாகனத்தில் ஏற்றிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அதை, ஆய்வு செய்ததில் 90 பார்சல்கள் இருந்ததையும் அதில் விலங்குகளின் இறைச்சி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதிரடியில் இறங்கிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள்: இறைச்சி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக உணவு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், "பார்சல்களை அனுப்புபவர்கள் மற்றும் பெறுபவர்களின் உரிமங்கள் பற்றிய விரிவான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஏதேனும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், விதிமுறைகளின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டது.
ராஜஸ்தானில் இருந்து பெங்களூருக்கு ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சியும் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாகக் கூறி இந்துத்துவா ஆர்வலர் புனித் கெரேஹள்ளி உள்ளிட்டோர் பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் இடையூறு செய்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு, பருத்திப்பேட்டை போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். இந்த இறைச்சி பெங்களூருவில் உள்ள பெரு உணவகங்களுக்கு வழங்கப்பட இருந்ததாக கூறப்படுகிறது.