Roopa IPS vs Rohini IAS: 19 குற்றச்சாட்டுகள்; ரோகினி சிந்தூரியின் தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்ட ரூபா ஐபிஎஸ்.. என்ன நடந்தது?
ரோகினி சிந்தூரியின் அந்தரங்க புகைப்படங்களை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியதாக ரூபா ஐபிஎஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிரங்கமாக பதிவிட்டுள்ளார்.
கர்நாடகா இந்து அறநிலையத்துறை கமிஷனராக இருப்பவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி. இவர் மைசூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, இவருக்கும் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ சா.ரா. மகேஷுக்கும் அரசு நிலம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதில், மைசூர் மாவட்ட ஆட்சியராக சிந்தூரி இருந்தபோது அவர் அரசு கட்டிடத்தில் விதிமுறைகளை மீறி நீச்சல் குளம் கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, கர்நாடகா பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ சா.ரா. மகேஷ், ரோகிணி சிந்தூரி குறித்து கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மணிவண்ணன் மூலமாக ரோகினி எம்.எல்.ஏ சா.ரா. மகேஷை சந்தித்து சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கான புகைப்படமும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி மீது ஐபிஎஸ் அதிகாரி ரூபா 19 குற்றச்சாட்டுகளை முன்வைத்து தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று கேள்வி எழுப்பினார். இந்தநிலையில், ரோகினி சிந்தூரியின் அந்தரங்க புகைப்படங்களை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியதாக ரூபா ஐபிஎஸ் பகிரங்கமாக பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேசிய ஐபிஎஸ் அதிகாரி ரூபா, “ரோகினி எம்எல்ஏ (சா.ரா.மகேஷை) சந்தித்ததாக பல செய்திகளைப் படித்தேன். இது சமரசச் சந்திப்பாக இருக்குமோ என்று சில செய்திகள் ஊகிக்கின்றன. இருப்பினும், ஏன் சமரசம் செய்ய வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதை அனுமதிக்கும் வகையில் சட்டத்தில் ஏதாவது ஏற்பாடு உள்ளதா? ரோகினிக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.” என்று தெரிவித்திருந்தார்.
ரூபாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ரோகினி சிந்தூரி, “பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மனநோயால் பாதிக்கப்படும்போது, அது மிகவும் ஆபத்தானதாகிறது. ரூபா எனக்கு எதிராக ஒரு தவறான, தனிப்பட்ட அவதூறு பிரச்சாரத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புகிறார். தற்போது உள்ள முன்னாள் கேடர் பதவி உட்பட, அவர் பணியாற்றிய ஒவ்வொரு இடத்திலும் அதைச் செய்துள்ளார். ரூபா பகிர்ந்த படங்கள் சமூக ஊடக இடுகைகள் மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்கள். என்னையும், எனது பெயரையும் கெடுப்பதற்காக ரூபா இத்தகைய செயலை செய்கிறார். ரூபா மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன்” என்று தெரிவித்தார்.
ஐபிஎஸ் அதிகாரியான ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா உள்ளிட்டோருக்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுத்ததை அம்பலப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.