Watch Video: பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை! ஜனாதிபதி வந்த நேரத்தில் கைவரிசை!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டேராடூனுக்கு வருகை தந்த நேரத்தில், அங்குள்ள நகைக்கடை ஒன்றில் பட்டப்பகலில் ரூபாய் 10 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது டேராடூன். இந்தியாவின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றாக டேராடூன் உள்ளது. டேராடூனில் உள்ள போஷ் பகுதியில் ராஜ்புர் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல நகைக்கடை ஒன்று உள்ளது.
பட்டப்பகலில் கொள்ளை:
இந்த நகைக்கடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தை விட நகைகள் விற்பனை அதிகளவில் இருக்கும் என்று கருதி அதற்கான முன்னேற்பாடுகளுடன் தயாராக இருந்தனர். இந்த நிலையில், நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த நகைக்கடையில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
நேற்று காலை வழக்கம்போல கடை ஊழியர்கள் கடையை திறந்துள்ளனர். அப்போது, பணியாளர்கள் அனைவரும் தங்களது வேலையை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென காலை 10.30 மணியளவில் 5 பேர் கொண்ட கும்பல் சட்டென்று கடைக்குள் நுழைந்தனர். முகத்தை மறைத்து வைத்திருந்த அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கடை ஊழியர்களிடம் காட்டி மிரட்டியுள்ளனர்.
देहरादून में रिलायंस ज्वेलरी शोरूम में करोड़ों की लूट का CCTV –
— Sachin Gupta (@SachinGuptaUP) November 9, 2023
बदमाश कस्टमर बनाकर घुसे। सबको गन पॉइंट पर लिया। सोने और हीरे के जेवरात लूटकर भाग गए।
आज शहर में राष्ट्रपति थीं। सारा पुलिस फोर्स उनकी सुरक्षा में लगा था। बाकी फोर्स कल अमित शाह के आगमन की तैयारियों में बिजी था। https://t.co/dH0lMHJ9UR pic.twitter.com/ZTad7LC9Vx
குடியரசுத் தலைவர் வருகை:
பின்னர், அங்கிருந்த ஊழியர்களை கட்டிப்போட்டுள்ளனர். பின்னர், கடையில் இருந்த நகைகள் அனைத்தையும், கடையில் உள்ள ஊழியர்கள் மூலமாகவே நிரப்ப வைத்து கொள்ளையடித்துள்ளனர். பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றனர். பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடை மேலாளர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்த காவல்துறையினர் கொள்ளை நடந்தபோது கிடைத்த சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டேராடூனில் இந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறியிருந்த சமயத்தில் நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக டேராடூனில்தான் இருந்தார். இதனால், டேராடூன் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குடியரசுத் தலைவர் வந்திருந்த சமயத்தில் பட்டப்பகலில் ஒரு கும்பல் நகைக்கடையின் உள்ளே சென்று நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 கோடி ரூபாய் நகைகள்:
நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் 10 கோடி முதல் ரூபாய் 15 கோடி வரை இருக்கும் என்று கடை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சி.சி.டி.வி. காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நாட்டின் குடியரசுத் தலைவர் வந்த சமயத்தில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து உத்தராண்ட் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.