Republic Day 2022 Award: எதிர்க்கட்சியின் மூத்த தலைவருக்கு பத்ம விருது - குலாம் நபி ஆசாத்தை கெளரவித்த மத்திய அரசு..!
பத்ம விருதுகள் பட்டியலில் எதிர்க்கட்சிகளின் 2 முக்கிய தலைவர்களான மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், சிபிஎம் - இன் முன்னாள் மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாசார்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ) மத்திய அரசு இன்று அறிவித்தது. இதில், நான்கு பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 17 பேருக்கு பத்ம பூஷணும், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், மறைந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.
73வது குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் பட்டியலில் எதிர்க்கட்சிகளின் இரண்டு முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் சிபிஎம்- இன் முன்னாள் மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாசார்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இருவருக்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
குலாம் நபி ஆசாத்துக்கு பத்ம பூஷன் விருது காங்கிரஸ் கட்சிக்குள்தலைமைப் பிரச்சினையால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில் கிடைத்துள்ளது. ஆசாத் கட்சியில் மிகப்பெரிய மாற்றங்களையும், பெரிய பொறுப்புகளையும் கவனித்து வந்தவர்.
குலாம் நபி ஆசாத்தின் பயணம்..
* குலாம் நபி ஆசாத் 1973 ஆம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டியின் தொகுதிச் செயலாளராக அரசியலில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்
* 1975ல் ஜம்மு-காஷ்மீர் இளைஞர் காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டார்
* 1980ல் இளைஞர் காங்கிரஸின் அகில இந்திய தலைவராக பதவி உயர்வு பெற்றார்
* மகாராஷ்டிராவின் வாஷிம் தொகுதியில் இருந்து 1980 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஆசாத் முதலில் மத்திய சட்டம், நீதி மற்றும் நிறுவன விவகாரங்களுக்கான துணை அமைச்சராகவும், பின்னர் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைக்கான மத்திய துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
* 1985 இல் நாடாளுமன்றத்தின் கீழ் சபைக்கு இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறை, அவர் உள்துறை அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சராகவும், உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
* 1990 இல், அவர் முதல் முறையாக ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முறையாக 1991-ம் ஆண்டு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1993ல் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்
* 1996 இல் ஆசாத் மேல் சபையில் இரண்டாவது முறையாக பதவியேற்றார். இந்த காலத்தில், எரிசக்திக்கான நிலைக்குழு, போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான நிலைக்குழு மற்றும் வக்ஃப் செயல்பாடு குறித்த கூட்டு நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
* 2002 ஆம் ஆண்டில் ராஜ்யசபாவிற்கு மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் அவர் மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சராகவும், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 2005 ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சராக ஆசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
* 2009 ஆம் ஆண்டில் நான்காவது முறையாக ராஜ்யசபாவிற்கு திரும்பினார் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
* 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். அதன்பிறகு 2015 இல் ராஜ்யசபாவிற்கு ஐந்தாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
* 2015-ம் ஆண்டு சிறந்த நாடாளுமன்றவாதி என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது
ராஜ்யசபாவில் இருந்து பிப்ரவரி 2021 இல் ஓய்வு பெற்றார் ஆசாத்.