அமெரிக்க கொரோனா தடுப்பூசியை குறிவைக்கும் ரிலையன்ஸ்.. ஒப்புதலுக்கு விண்ணப்பம் !
அமெரிக்காவிலிருந்து கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் அறக்கட்டளை இந்தியாவில் 2010ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை மூலம் இந்தியாவில் பல்வேறு இடங்களில் சமுதாய தொண்டு பணிகள் மற்றும் உதவிகளை ரிலையன்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. தற்போது கொரோனா பெருந்தொற்று காலத்திலும் இந்த அறக்கட்டளை மூலமாக நற்பணிகள் மற்றும் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக முகக்கவசம் அளிப்பது, இலவசமாக உணவு வழங்குவது போன்ற பணிகளை அந்நிறுவனம் செய்து வருகிறது.
இந்நிலையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் அமெரிக்காவில் 20 லட்சம் டோஸ் தடுப்பூசியை இறக்குமதி செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திடம் வாங்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசிகள் அனைத்தும் இலவசமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு போடப்படும் என்று அந்நிறுவனம் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. இத்தடுப்பூசிகளை விற்க பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் அந்நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏனென்றால் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பாக பல மருத்துவமனைகள் உள்ளன. எனவே அங்கு இந்த தடுப்பூசியை விற்கப்போவதில்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் உறுதியாக தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் தடுப்பூசியை இறக்குமதியை செய்ய மத்திய சுகாதாரத் துறையிடம் ஒப்புதல் கோரியுள்ளது. இந்த தகவலை அந்த அறக்கட்டளை சார்ந்த ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தனது தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க விண்ணப்பித்தது. இதனைத் தொடர்ந்து உயர்மட்ட அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தியது. அப்போது இந்தியாவிற்கு தன்னுடைய தடுப்பூசியை ஏற்றுமதி செய்வது கடினம் என்று அந்நிறுவனம் தெரிவித்தது. இதனால் தன்னுடைய தடுப்பூசிகளை பயோலாஜிகல் ஈ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இந்தியாவில் தயாரிப்பதாக ஜான்சன் நிறுவனம் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து பயோலாஜிகல் ஈ நிறுவனம் தயாரிக்கும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளை வாங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. எனினும் இந்தியாவில் தற்போது வரை ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளை பயன்படுத்த தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் அனுமதி வழங்கப்படாத தடுப்பூசியை எப்படி ரிலையன்ஸ் இறக்குமதி செய்து பயன்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் தடுப்பூசியை வெளிநாட்டிலிருந்து மாநிலங்கள் நேரடியாக கொள்முதல் செய்யும் போது அதற்கு பல்வேறு நிறுவனங்கள் மறுத்தன. தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மட்டும் தடுப்பூசி அளிக்க நிறுவனங்கள் எப்படி ஒத்துக்கொண்டன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் படிக்க :கையில் தாலியுடன் காதலன் வீட்டுக்குச்சென்று தற்கொலை மிரட்டல் விடுத்த காதலி!