Lakshadweep Issue: ”லட்சத்தீவு நிர்வாகியை உடனே திரும்பப்பெற வேண்டும்” - குடியரசுத் தலைவருக்கு கேரள எம்.பி கடிதம்
லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் பட்டேலை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கேரள எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
![Lakshadweep Issue: ”லட்சத்தீவு நிர்வாகியை உடனே திரும்பப்பெற வேண்டும்” - குடியரசுத் தலைவருக்கு கேரள எம்.பி கடிதம் Recall anti people Lakshadweep administrator urgently Kerala MP Elamaram Kareem writes to President Kovind Lakshadweep Issue: ”லட்சத்தீவு நிர்வாகியை உடனே திரும்பப்பெற வேண்டும்” - குடியரசுத் தலைவருக்கு கேரள எம்.பி கடிதம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/25/d39fde344b02272f7e0736577cf2a57c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அந்தமான் நிக்கோபார் தீவு அருகே அமைந்துள்ளது லட்சத்தீவு. இதன் நிர்வாகியாக கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரபுல் பட்டேலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார். நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், லட்சத்தீவிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆனால், பிரபுல் பட்டேலின் நடவடிக்கைகள் தன்னிச்சையாக உள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், அவரை லட்சத்தீவு நிர்வாகி பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேரளாவின் எம்.பி. எலமாரம் கரீம் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “பிரபுல் படேல் பதவியேற்ற உடன் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதறகான நடைமுறையில் இருந்த ஸ்டாண்டர்ட் ஆபரேட்டிங் நடைமுறையை தன்னிச்சையாக மாற்றிவிட்டார். அவரது திட்டமிடப்படாத மாற்றம்தான் தற்போது கொரோனா அதிகரிப்பிற்கு காரணம் என்று அங்கு வாழும் மக்கள் கூறுகின்றனர்.
பிரபுல் வழங்கிய அனைத்து உத்தரவுகள் மற்றும் அறிவிப்புகள் அங்கு வாழும் மக்களின் பாரம்பரி வாழ்க்கை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை அழிப்பதற்கான உள்நோக்கத்துடன் வழங்கப்படுவதை காண முடிகிறது. அனைத்து விதிகளும் மக்களைப் பற்றி கவலைப்படாமல் அவர்களது உணவு மற்றும் வாழ்க்கை முறையை தேர்வு செய்யும் சுதந்திரத்தை தடை செய்வதாகவே அமைந்தது. இவரது நிர்வாகத்தின் கீழ் லட்சத்தீவின் பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரிந்த நூற்றுக்கணக்கான சாதாரண மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை இழந்துவிட்டனர். ஒவ்வொரு நாளும் அரசு அலுவலகங்களில் இருந்து சாதாரண மற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. 38 அங்கன்வாடிகள் மூடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இந்த தொற்றுநோய்களின் போது உள்ளூர் மக்கள் இடையே மிகுந்த துன்பத்தையும், கவலையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்தீவில் மது அருந்துவதற்கு கட்டுப்பாடு இருந்தது. தற்போதைய நிர்வாகி அந்த தடையை நீ்க்கிவிட்டார். இந்த முடிவு அந்த மக்களின் நல்லணிக்கத்தை சிதைக்கும் விதமாக உள்ளது. தீவில் வாழும் பெரும்பான்மையான வசிக்கும் மீனவர்களின் வலைகள் மற்றும் பிற உபகரணங்கள் வைத்திருந்த கொட்டகைகள் எந்த முன்னறிவிப்பும் இன்றி இடிக்கப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்திற்கு பேப்பூர் துறைமுகத்திற்கு பதிலாக இனி மங்களூர் துறைமுகத்தை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பு கேரளாவிற்கும், லட்சத்தீவிற்கும் உள்ள தொடர்பை துண்டிக்கும் விதமாக அமைந்துள்ளது. சீர்த்திருத்தங்கள் என்ற பெயரில் புதிய நிர்வாகி லட்சத்தீவு மக்களின் பாரம்பரிய வாழ்க்கையை முற்றிலுமாக அழிக்க முயற்சிக்கிறார். அவரும், அவரது கொள்கைகளும் தீவை விட்டு வெளியேற வேண்டும் என்று முழு லட்சத்தீவும் விரும்புகிறது.
இந்த சூழ்நிலையில், இப்படிப்பட்ட சர்வாதிகார நிர்வாகிகளை தொடர அனுமதிக்கூடாது . பிரபுல் படேலை திரும்ப உடனே அழைக்க வேண்டும். அவரது அனைத்து உத்தரவுகளையும் திரும்ப பெற விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எழுதியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)