Ram Mandir Inauguration: ஞாயிறில் 90.. நேற்று மட்டும் 100.. அயோத்தி விமான நிலையத்திற்கு படையெடுத்த விமானங்கள்!
பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தில் சுமார் 100 தனியார் விமானங்கள் வந்து இறங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயோத்தியில் குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தில் சுமார் 100 தனியார் விமானங்கள் வந்து இறங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுமார் 7,000க்கு மேற்பட்ட முக்கியஸ்தர்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதில், நடிகையும் மதுரா எம்பியுமான ஹேமமாலினி, நடிகர்கள் ரஜினிகாந்த், பவன் கல்யாண், பாடகர் ஷங்கர் மகாதேவன், இயக்குநர்கள் மதுர் பண்டார்கர், சுபாஷ் காய், சீரஞ்சீவி, ராம்சரண், பிடி உஷா ஆகியோர் பிரம்மாண்ட விழாவில் கலந்து கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அயோத்தியில் உள்ள பிரமாண்ட கோயிலில் 5 வயது குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு துறைகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து நேற்று ஒருநாளில் மட்டும் அயோத்திக்கு செல்ல சுமார் 100 தனியார் விமானங்கள் வந்திருங்க முன்பதிவு செய்யப்பட்டதாக விமான ஆபரேட்டர்கள் சங்கத்தின் தலைவர் கேப்டன் ஆர்.கே.பாலி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், இவற்றில் சுமார் 50 விமானங்கள் பிசினஸ் கிளாஸ் விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
50 பிசினஸ் கிளாஸ் விமானங்கள்:
இதுகுறித்து ஏர் ஆபரேட்டர் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவான நேற்று அயோத்தியில் உள்ள மகரிஷ் வால்மீகி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 100 விமானங்கள் இயக்கப்பட்டன. அதேபோல், ராமர் கோயிலின் விழாவில் கலந்து கொண்டபின் சிறப்பு விருந்தினர்கள் புறப்படுவதற்காக விமானங்களில் எண்ணிக்கை சுமார் 100 ஐ கடந்தது” என்று தெரிவித்தார்.
கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் கூட, கார்ப்பரேட் தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் உட்பட பலர் அயோத்தியை வந்தடைந்தனர். அன்றைய நாளில் மட்டும் சுமார் 90 விமானங்கள் இயக்கப்பட்டன. அதில், மோகன் பகவத், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ரஜினி காந்த், தனுஷ், அனுபம் கேர், கைலாஷ் கெர், ஜூபின் நௌடியல், பிரசூன் ஜோஷி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் அனில் அம்பானி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காலை விமானங்களில் வந்திருந்தனர்.
இவர்களைத் தவிர ஹேமா மாலினி, கங்கனா ரணாவத், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மொராரி பாபு, அனில் கும்பளே, வெங்கடேஷ் பிரசாத், சாய்னா நேவால், பவன் கல்யாண், மதுர் பண்டார்கர், சுபாஷ் காய், ஷெபாலி ஷா மற்றும் சோனு நிகம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமையே அயோத்தியை அடைந்தனர்.
மேலும், அயோத்தியில் நடந்த கும்பாபிஷேக விழாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி கலந்து கொண்டனர். இது தவிர, அவரது மகன் ஆகாஷ் தனது மனைவி ஷ்லோகாவுடன், ஆனந்த் தனது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்ட், அம்பானியின் மகள் இஷா தனது கணவர் ஆனந்த் பிரமலுடன் அங்கு வந்திருந்தார். இவர்கள் அனைவரும் அவர்களுக்கு சொந்தமான தனி விமானம் மூலம் மும்பையில் இருந்து அயோத்தி விமான நிலையத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. அம்பானி குடும்பத்தைத் தவிர, 506 பேரின் பெயர்கள் மாநில விருந்தினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.