Rajyasabha Seat scam: ரூ.100 கோடிக்கு மாநிலங்களவை உறுப்பினர், ஆளுநர் பதவி..? மோசடி கும்பலை சிபிஐ பிடித்தது எப்படி?
மாநிலங்களவை உறுப்பினர், ஆளுநர் உள்ளிட்ட பதவிகள் வாங்கி தருவதாக 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் பல்வேறு மாநிலங்களில் அவ்வப்போது காலியிடங்களுக்கு ஏற்ப நிரப்பப்படும். அதில் போட்டியிட்டு கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவார்கள். இந்தச் சூழலில் மாநிலங்களவைத் தேர்தல் இடம் வாங்கி தருவதாக 4 பேர் கொண்ட கும்பல் மோசடி செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக 4 பேர் கொண்ட கும்பல் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ மகாராஷ்டிராவைச் சேர்ந்த கமலாக்கர் பிரேம்குமார் பண்டாகர், கர்நாடகாவின் ரவீந்திர விட்டல், டெல்லியைச் சேர்ந்த மஹிந்திர பால் அரோரா ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகளுக்கு ஒரு புகார் ஒன்று வந்துள்ளது. அந்தப் புகாரில் சில நபர்களிடன் மாநிலங்களவை உறுப்பினர், ஆளுநர் மற்றும் மத்திய அமைச்சகங்களில் முக்கியமான இடங்களில் வேலை ஆகியவற்றை வாங்கி தருவதாக கூறி சுமார் 100 கோடி ரூபாய் வரை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சோதனை ஒன்று செய்யப்பட்டுள்ளது.
அப்போது இந்த 4 பேரில் ஒருவர் சிபிஐ அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பி ஓட முற்பட்டுள்ளார். அதன்பின்னர் சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த 4 பேர் இடமும் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்படி பண்டாகர் என்ற நபர் இந்த விஷயத்தில் மூளையாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர் தனக்கு பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியமான நபர்கள் தெரியும் என்று கூறி பலரை ஏமாற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் பண்டாகர் தன்னை ஒரு சிபிஐ அதிகாரி என்று கூறி காவல்நிலையங்களில் பலரை மிரட்டியுள்ளதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த நான்கு பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்த நபர்கள் உள்ளிட்ட பட்டியலையும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர் பதவி, ஆளுநர் பதவி மற்றும் உயர் பதவிகளை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்