Sachin Pilot New Party: ராஜஸ்தானில் கவிழ்கிறதா காங்கிரஸ் அரசு..? புது கட்சி தொடங்குகிறாரா சச்சின் பைலட்... தலைமைக்கு மீண்டும் தலைவலி..!
சச்சின் பைலட், பாஜகவில் இணைவாரா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், அவர் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸில் இருந்து வெளியேறி புதிதாக கட்சி தொடங்கும் வேலைகளில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜஸ்தானில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட், இளம் தலைவர் சச்சின் பைலட் இடையேயான பனிப்போர் உச்சத்தை அடைந்துள்ளது. காங்கிரஸில் இருந்து சச்சின் பைலட் விலகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜஸ்தான் காங்கிரஸில் பனிப்போர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலின் போது சச்சின் பைலட் முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்த போது, கட்சியில் சீனியரான அசோக் கெலாட்டுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால் கடுப்பான சச்சின் பைலட் கெலாட்டுக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்து வந்தார்.
இதற்கிடையே, கடந்த 2020ஆம் ஆண்டு, கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு 18 சட்டப்பேரவை உறுப்பினர்களும் போர்க்கொடி தூக்கினர். காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலைக்கு சென்ற நிலையில், டெல்லி தலைமையின் தலையீட்டின் காரணமாக ஒரு மாதம் நீடித்த பிரச்னை முடிவுக்கு வந்தது. பின்னர், துணை முதலமைச்சர் மற்றும் மாநில தலைவர் பதவியில் இருந்து பைலட் நீக்கப்பட்டார்.
இருப்பினும் ராகுல்காந்தி, பிரியங்காகாந்தியின் முயற்சியில் சச்சின் பைலட் சமாதானம் செய்யப்பட்டு தற்போது கட்சியில் தொடர்ந்து வருகிறார். இருந்தபோதிலும், பைலட், கெலாட்டுக்கு இடையேயான பிரச்னை முடிந்தபாடில்லை.
அசோக் கெலாட்டுக்கு நெருக்கடி தரும் சச்சின் பைலட்:
கடந்த வசுந்தராராஜே தலைமையிலான பாஜக அரசில் நடைபெற்ற ஊழல்களை விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும், ராஜஸ்தான் பணியாளர் தேர்வு வாரியத்தை கலைத்துவிட்டு மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணம், உண்ணாவிரதம் போன்றவற்றை செய்து அசோக் கெலாட்டுக்கு நெருக்கடி கொடுத்தார்.
ராஜஸ்தானில் எதிர்க்கட்சியான பாஜக செய்யவேண்டியதை, ஆளும் கட்சியை சேர்ந்த சச்சின் பைலட்டே செய்தது ராஜஸ்தான் அரசியலில் புயலைக் கிளப்பியது. அங்கு, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், இருவருக்கும் இடையிலான மோதல் காங்கிரஸ் தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமை கவனம் செலுத்தியதால் ராஜஸ்தானில் நிலைமை கை மீறி சென்றது. கர்நாடகாவில் தேர்தல் முடிந்து காங்கிரஸ் ஆட்சியமைத்த நிலையில், அடுத்து தேர்தல் வர இருக்கும் மாநிலங்களை நோக்கி காங்கிரஸ் தலைமை கவனத்தைத் திருப்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த மே 29ம் தேதி ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் ஆகியோர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோருடன் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இருவரையும் எதிரெதிரே அமர வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
புது கட்சி தொடங்குகிறாரா சச்சின் பைலட்..?
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், கெலாட் மற்றும் பைலட் ஆகியோருக்கு இடையே எந்த பிரச்சனை இல்லை என்றும், இருவரும் சேர்ந்தே தேர்தலை சந்திப்பார்கள் என்றும் கூறியது காங்கிரஸ் தலைமை. எனினும், சச்சின் பைலட்டுக்கு பேச்சுவார்த்தையில் திருப்தி ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.
இதனால், காங்கிரஸில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்த வந்த ஜோதிராதித்ய சிந்தியாவை போல், சச்சின் பைலட்டும் பாஜகவில் இணைவாரா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், அவர் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸில் இருந்து வெளியேறி புதிதாக கட்சி தொடங்கும் வேலைகளில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக முற்போக்கு காங்கிரஸ் மற்றும் ராஜ் ஜன சங்கர்ஷ் கட்சி என்ற இரண்டு பெயர்களை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ராகுல்காந்தி தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் இந்தியா வரும் வரை பொறுமையாக இருக்கும்படி பைலட்டிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், அவர் தன் ஆதரவாளர்களை திரட்டி வருவதாகவும், ஜூன் 11ம் தேதி சச்சின் பைலட்டின் தந்தை ராஜேஷ் பைலட்டின் 23வது நினைவு தினம் வரும் நிலையில் அன்றைய தினம் தனது புதிய கட்சியை சச்சின் பைலட் தொடங்கும் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.