Rajasthan Budget: 'சாரிப்பா...' பழைய பட்ஜெட்டை சட்டசபையில் படித்த ராஜஸ்தான் முதலமைச்சர் - என்னதான் நடந்தது?
Rajasthan Budget: நிதித்துறையை கவனித்து வரும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருந்தார். ஆனால், தற்செயலாக பழைய பட்ஜெட் உரையை அவர் வாசித்துவிட்டார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நிதித்துறையை கவனித்து வரும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவைக்கு தயாராக வந்தார்.
ஆனால், அவர் பட்ஜெட்டை வாசித்த சில நிமிடங்களில் அனைவரும் குழம்பினர். ஏனென்றால், அவர் கடந்தாண்டு பட்ஜெட்டை சட்டசபையில் வாசித்தார். பின்னர், தலைமை கொறடா இடைமறித்து, பட்ஜெட் உரையை தாக்கல் செய்வதை தடுத்து நிறுத்தினார்.
இதையடுத்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். சட்டப்பேரவையின் மையப்பகுதிக்கு வந்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சட்டப்பேரவை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் அசோக் கெலாட் செய்த தவறை கடுமையாக விமர்சித்து பேசிய முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, "8 நிமிடம் முதலமைச்சர் பழைய பட்ஜெட்டை வாசித்துக்கொண்டே இருந்தார்.
நான் முதலமைச்சராக பொறுப்பு வகித்த போது, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன், பலமுறை சரிபார்த்து, படிப்பேன். பழைய பட்ஜெட்டைப் படிக்கும் ஒரு முதலமைச்சர் கையில் மாநிலம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்" என்றார்.
இதையடுத்து பேசிய பாஜக மூத்த தலைவர் குலாப் சந்த் கட்டாரியா, "இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய கூடாது. லீக் செய்யப்பட்டு விட்டதா?" என கேள்வி எழுப்பினார்.
பின்னர், அமைதி காக்கும்படி எதிர்கட்சி உறுப்பினர்களிடம் சபாநாயகர் சி.பி. ஜோஷி வலியுறுத்தினார். ஆனால், எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், சட்டப்பேரவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அமர்ந்து மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதுகுறித்து பாஜக எம்எல்ஏ ராஜேந்திர ரத்தோர் கூறுகையில், "இன்று பழைய பட்ஜெட்டை தாக்கல் செய்து ராஜஸ்தான் சட்டப்பேரவையை முதலமைச்சர் கெலாட் அவமதித்துள்ளார்" என்றார்.
ALSO READ | Cow Hug Day: ”இடதுசாரி அரசை விட பசுக்கள் அதிக நன்மை செய்கின்றன”.. கேரள பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து..
பழைய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ள முதலமைச்சர் கெலாட், "என் கையில் உள்ள நிதிநிலை அறிக்கைக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையின் பிரிதிகளிலும் வித்தியாசம் இருந்தால் நீங்கள் சுட்டிக்காட்டலாம்.
ஆனால், என்னுடைய பட்ஜெட் உரையில் ஒரு பக்கம் மட்டும் தவறுதலாக இணைக்கப்பட்டுள்ளது. பிறகு எப்படி பட்ஜெட் கசிந்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழும்" என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, சட்டப்பேரவை கூடி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய கெலாட், "நான் வருந்துகிறேன், நடந்தது தவறு" என்றார்.
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், கெலாட் அரசின் கடைசி பட்ஜெட் இதுவாகும்.
முதல்முறையாக, ராஜஸ்தானில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் பட்ஜெட் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.