Cow Hug Day: ”இடதுசாரி அரசை விட பசுக்கள் அதிக நன்மை செய்கின்றன”.. கேரள பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து..
பசு அணைப்பு தினத்தை ஆதரித்து கேரளா பா.ஜ.க தலைவர் கே. சுரேந்திரன் அதனை வரவேற்றுள்ளார். மேலும் இடதுசாரி அரசை விட பசுக்கள் அதிக நன்மை செய்கின்றன என கூறியுள்ளார்.
Cow Hug Day: பிப்ரவரி 14ஆம் தேதி பசுக்களைக் கட்டிப்பிடிக்கும் தினத்தை கொண்டாட வேண்டும் என்ற விலங்குகள் நல வாரியத்தின் வேண்டுகோளை கேரள பாஜக தலைவர் கே சுரேந்திரன் வரவேற்று, பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசை விட, மாநிலத்தில் உள்ள மக்களுக்கு பசுக்கள் அதிக நன்மை செய்கின்றன என்றார்.
கேரளாவிற்கு அமைச்சர்களை விட பசுக்கள் அதிக பங்களிப்பை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார். கேரள அரசு விவசாயத் துறையை அழித்து வருவதாக குற்றம்சாட்டிய சுரேந்திரன், மக்கள் வருமானம் ஈட்ட பசுக்கள் உதவுகின்றன என்றார். காதலர் தினமான அதே நாளில் மாட்டு அணைப்பு தினத்தை கொண்டாட வேண்டும் சுரேந்திரன், "காதலர் தினத்தில் காதலை கொண்டாடலாம். யாரும் அதைப் பற்றி புகார் செய்யவில்லை. பசுக்களை சந்தித்து மரியாதை செய்ய வேண்டும் என்பதுதான் அறிவுறுத்தல்" என்று கூறினார்.
உலகம் முழுவதும் காதலர்கள் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அணைக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா கலாசாரத்திலும் கிராமப்புற பொருளாதாரத்தில் மாடு வகிக்கும் முக்கிய பங்கினை மேற்கோள் காட்டும் விதமாக இந்த கோரிக்கை புதன்கிழமை விடுக்கப்பட்டது.
யோகா தினத்தைப் போலவே, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், இந்திய விலங்குகள் நல வாரியத்துடன் இணைந்து இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக பசு அணைப்பு தினத்தை அனுசரிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றும் வகையில், அனைத்து பசுப் பிரியர்களும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அணைப்பு தினமாகக் கொண்டாட வேண்டும்.
மேற்கத்திய கலாச்சாரத்தின் கடுமையான தாக்கத்தின் காரணமாக வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் உள்ளன. எனவே, நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பசு அணைப்பு தினத்தை கொண்டாடுமாறு குடிமக்களுக்கு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது"
இதுகுறித்து இந்திய விலங்குகள் நல வாரியத்தின் சட்ட ஆலோசகர் பிக்ரம் சந்திரவன்ஷி கூறுகையில், "பசு அணைப்பு தினத்தை கொண்டாடுவதன் பின்னணியில் உள்ள குறிக்கோள், பசுக்கள் மற்றும் இந்திய கலாச்சாரத்தின் மீது கருணை காட்ட மக்களை ஊக்குவிப்பதே ஆகும்.
பசுக்களின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதும், மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் மெல்ல மெல்ல விலகிச் செல்பவர்களை மீட்டெடுப்பதே இதன் நோக்கம்" என்றார்.
காதலர் தினமே மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் எனக் கூறி அதற்கு எதிராக வலதுசாரிகள் தொடர்ந்து கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியானது. இதற்கு ஆதரவு தரும் வகையில் கேரளா பா.ஜ.க தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.