10 நாள்கள் திக் திக்! போர்வெலில் சிக்கி தவிப்பு.. மீட்கப்பட்ட உடனே குழந்தை பரிதாப மரணம்!
10 நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது குழந்தை, மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது குழந்தை, மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது. குழந்தையை மீட்க ஐந்து முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையின் பெயர் சேத்னா. 10 நாள்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சேத்னா, உடனடியாக மருத்துவ கவனிப்புக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பரிசோதனையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆழ்துளை கிணற்றில் சிக்கி தவித்த குழந்தை:
கோட்புட்லியின் கிராத்புரா கிராமத்தைச் சேர்ந்த பதியாலி கி தானியில் 700 அடி ஆழ்துளை கிணற்றில் குழந்தை சிக்கிக் கொண்டது. கடந்த டிசம்பர் 23ஆம் தேதி மதியம் விளையாடிக் கொண்டிருந்த போது, அக்குழந்தை கிணற்றில் தவறி விழுந்தது.
சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, சிறுமியின் அழுகை சத்தம் கேட்ட குடும்பத்தினர், ஆழ்துளை கிணற்றில் சிக்கியதைக் கண்டனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக மருத்துவக் குழுவுடன் வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிறுமிக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு, அவரை மேலே இழுக்கும் ஆரம்ப முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து, மீட்புக் குழுவினர், குழியை தோண்டத் தொடங்கினர். ஆனால், குழியின் தவறான பாதையிலேயே அவர்கள் தோண்டியது பின்னர் தெரிய வந்தது.
மீட்கப்பட்ட உடனே உயிரிழந்த குழந்தை:
கடந்த சில மணிநேரங்களாக, ஆக்சிஜன், உணவு என எதுவும் அவருக்கு வழங்கப்படவில்லை. இதையடுத்து, அவரது உடல்நிலை மோசமாகிவிட்டது. ஆழ்துளை கிணறு, குறிப்பிட்ட ஆழத்திற்கு பின் சாய்ந்ததாகவும் இதனால் தவறுகள் நடந்ததாகவும் கலெக்டர் கல்பனா அகர்வால் விளக்கம் அளித்தார்.
இறுதியாக, மீட்புக் குழுக்களுக்கு உதவ டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் மெட்ரோவில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆரம்பத்தில், குழிக்கு 8-அடி அகலம் தேவை என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் பின்னர் செயல்பாட்டை எளிதாக்க 12 அடியாக விரிவாக்கப்பட்டது. ஆனால், நீண்ட நேரத்திற்கு பிறகு, குழந்தை மீட்கப்பட்ட காரணத்தால் மீட்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் குழந்தை உயிரிழந்தது.
இதையும் படிக்க: New Municipal Corporation: நேற்று முதல்வர் சொன்னார்: இன்று அரசாணை.! புதிதாக உருவாகும் 13 மாநகராட்சிகள்