New Municipal Corporation: நேற்று முதல்வர் சொன்னார்: இன்று அரசாணை.! புதிதாக உருவாகும் 13 மாநகராட்சிகள்
New Municipal Corporations: கன்னியாகுமரி உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளை உருவாக்கவும், 16 மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
13 புதிய நகராட்சிகள்:
கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளை உருவாக்க தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. கன்னியாகுமரியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அறிவித்த நிலையில், இன்று அரசாணை வெளியாகி இருக்கிறது.
மேலும் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநகராட்சிகளின் அருகே உள்ள குறிப்பிட்ட நகராட்சிகள், பேரூராட்சிகளை இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணை:
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், "தமிழ்நாடு நகரமயமாதலில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகர்ப்புர மக்கள் தொகை 48.45 சதவீதமாக இருந்தது. தற்போது நகர்ப்புரங்களில் வாழும் மக்கள் தொகையின் சதவீதமானது, மேலும் உயர்ந்துள்ளது. எனவே, மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலை கருத்திற்கொண்டு, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் வந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய மாநகராட்சிகள்:
கடந்த 2021 ஆம் ஆண்டு 6 புதிய மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே போன்று. 10.08.2024 அன்று திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாநகராட்சிகள் அருகிலுள்ள 2 பேரூராட்சிகள் மற்றும் 46 ஊராட்சிகளை இணைத்து அனைத்து சட்ட நடைமுறைகளை பின்பற்றி மாநகராட்சிகளாக உருவாக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளை உருவாக்க தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.
எதனால் உருவாக்கம்:
மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்ற பெரியளவிலான நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளைச் சுற்றி அமைந்துள்ள ஊராட்சிகள் / பேரூராட்சிகள் போன்றவை நகரங்களின் / பெருநகரங்களின் நுழைவாயிலாக அமைந்துள்ளதுடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் ஈட்டித் தருகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் பலவும் அமைந்துள்ளன.
இப்பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஏராளமானோர் அருகிலுள்ள நகர்ப்புர பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள ஊராட்சிகளிலும் குடியிருந்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் செய்யும் வகையிலும் திட்டமிட்ட வளர்ச்சிக்கும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு அவசியமாகிறது. இதன்மூலம் தொடர்புடைய பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
மேலும், மாநகராட்சி/ நகராட்சி/ பேரூராட்சிகளின் எல்லைகளை சுற்றி அமைந்துள்ள பெரும்பாலான ஊரகப்பகுதிகள் நகர்ப்புர பகுதிகளுக்கு சமமாக வளர்ந்து வருகின்றன. ஆகையால், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளை சுற்றி அமைந்துள்ள பகுதிகளுக்கும், நகர்ப்புரங்களுக்கு இணையான வகையில் சாலைகள், குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை, பொது/சமுதாய பயன்பாட்டிற்கான நவீன கழிப்பிடங்கள், பாதாளச் சாக்கடை கட்டமைப்பு, ஆற்றல்மிகு தெருவிளக்குகள் போன்ற மக்களுக்கான இன்றியமையாத வசதிகளை விரிவுப்படுத்த வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது.