71 கோடி ரூபாய் இழப்பு...திருப்பி தர வேண்டிய பணத்தை மறுத்த அமைச்சகம்...தள்ளுபடி செய்த ரயில்வே...முழு விவரம்
கடந்த நிதியாண்டில், கிசான் ரயில் சேவைகளுக்கான கூடுதல் மானியமாக செலவழித்த 71.86 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய வேண்டிய கட்டாயம் இந்தியன் ரயில்வே-க்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில், கிசான் ரயில் சேவைகளுக்கான கூடுதல் மானியமாக செலவழித்த 71.86 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய வேண்டிய கட்டாயம் இந்தியன் ரயில்வே-க்கு ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.50 கோடி உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்ததால், உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம் கூடுதல் செலவை ஏற்க மறுத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 121.86 கோடி ரூபாயை ரயில்வே மானியமாக செலவிட்டுள்ளது. இது 2021-22ஆம் ஆண்டில் உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தால் விவசாயிகளுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட கிசான் ரயில் சேவை திட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட ரூ.50 கோடியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
'Operation Greens - TOP to total'திட்டத்தின் கீழ்தான் கிசான் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை அமல்படுத்திய உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம், நிலுவையில் உள்ள தொகையை திருப்பி செலுத்துவதற்கு எதிராக முடிவு எடுத்த நிலையில், 71.86 கோடி ரூபாய் செலவை தள்ளுபடி செய்யும் நிலைக்கு இந்தியன் ரயில்வே தள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான ரயில்வே போக்குவரத்துக் கட்டணத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு நேரடியாக 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மானியமாக 50 கோடி ரூபாயை உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம் நிர்ணயித்துள்ளது. இந்த தொகையை உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தால் திருப்பி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
பிடிஐ செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு பதிலளித்த ரயில்வே, மானியத்தை உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம் அறிமுகப்படுத்தியதாகக் கூறியது. 2021-22 ஆம் ஆண்டில் ரயில்வே 121.86 கோடி ரூபாயை செலவிட்டதாகவும், உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம் மூலம் 50 கோடி ரூபாய் மட்டுமே திருப்பிச் செலுத்தப்பட்டதாகவும் அது விளக்கம் அளித்துள்ளது.
"மீதமுள்ள 71.86 கோடி ரூபாயை திரும்பப் பெறுவது தொடர்பான விவகாரம் அமைச்சகத்திடம் திரும்பத் திரும்ப எழுப்பப்பட்டது. இருப்பினும், இந்த நோக்கத்திற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது சாத்தியமில்லை என்று அமைச்சகம் தெரிவித்தது. இதனால் அதை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பில்லை.
இந்த மீதமுள்ள ரூ. 71.86 கோடி ரூபாய் ரயில்வே ஏ.சி புத்தகங்களில் நிலுவையில் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. எனவே, ரயில்வே அமைச்சரின் ஒப்புதலுடன் அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது" என ரயில்வே அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.
கிசான் ரயில் சேவை திட்டமானது, உற்பத்தி மையங்களை சந்தைகள் மற்றும் நுகர்வு மையங்களுடன் இணைப்பதன் மூலம் விவசாயத் துறை வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஆகஸ்ட் 2020 இல் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டில் 1,851 ரயில்கள் இயக்கப்பட்டன.