Odisha Train Accident : அதிவேகமாக இயக்கப்பட்டதா ரயில்கள்? ஒடிஷா கோர விபத்தை தெளிவாக விளக்கிய ரயில்வே..
ரயிலின் தடத்தை மாற்றக்கூடிய மின்னணு இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட மாற்றமே விபத்திற்கு காரணம் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்திருந்தார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு நடந்த கோர விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைவதற்கு காரணமான இந்த விபத்து, இந்திய ரயில்வே வரலாற்றில் மிக மோசமான விபத்தாக பார்க்கப்படுகிறது.
விபத்து எப்படி நடந்தது, அதற்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. சிக்னல் கொடுப்பதில் ஏற்பட்ட குறைபாடு, அதி வேகமாக ரயில்கள் இயக்கப்பட்டதே ரயில் விபத்துக்கு காரணம் என தகவல்கள் வெளியானது. ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரயில்வே புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
ரயில்வே அமைச்சர் விளக்கம்:
ரயிலின் தடத்தை மாற்றக்கூடிய மின்னணு இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட மாற்றமே விபத்திற்கு காரணம் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்திருந்தார். ஒரு பாதையில் இருந்து மற்றொரு பாதைக்கு ரயில்களின் திசையை மாற்றுவதற்காக மின்னணு இண்டர்லாக்கிங் முறை பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல, விபத்தில் சிக்கிய ரயில்கள் அதிவேகமாக இயக்கப்படவிலலை என ரயில்வே போர்டு உறுப்பினர் ஜெய வர்மா சின்ஹா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து ஹவுராவிற்கும், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஹவுராவிலிருந்தும் வந்து கொண்டிருந்தது.
ரயில்கள் அதிவேகமாக இயக்கப்படவில்லை:
இரண்டு பிரதான லைனிலும் சிக்னல் பச்சை நிறத்தில் இருந்தது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் 128 கிமீ வேகத்திலும், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 126 கிமீ வேகத்திலும் சென்று கொண்டிருந்தது. இதன் வரம்பு மணிக்கு 130 கிமீ ஆகும். எனவே, இரண்டு ரயில்களும் அதிவேகமாக இயக்கப்படவில்லை.
சிக்னல் கொடுப்பதில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. மேலதிக விசாரணைக்குப் பின்னரே விவரங்கள் தெரியவரும். இம்மாதிரியாக அதிக வேகமாக இயக்கப்படும் போது எதிர்வினை நேரம் மிகவும் குறைவாக இருக்கும். பாதுகாப்பு அமைப்பு தோல்வி அடைந்தது என்று சொல்வது சரியாக இருக்காது.
இவை முதல்கட்ட தகவல்கள் மட்டுமே. முறையான விசாரணை முடியும் வரை உறுதியாக எதுவும் கூற முடியாது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் மட்டுமே விபத்துக்குள்ளானது.சில காரணங்களால், அந்த ரயில் மட்டுமே விபத்துக்குள்ளானது, என்ஜினும் பெட்டியும் தடம் புரண்டது" என்றார்.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த விளக்கத்தில், "ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளார். அது முடிவடைந்து விசாரணை அறிக்கை வந்து சேரட்டும். முன்னதாக விபத்திற்கான காரணம் என்ன, காரணமானவர்கள் யார் என்ன என்பது குறித்து கண்டறிந்துள்ளோம்.
ரயிலின் தடத்தை மாற்றக்கூடிய மின்னணு இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட மாற்றமே விபத்திற்கு காரணம். தற்போதைக்கு இந்த பாதையில் போக்குவரத்தை சீர் செய்வது தான் எங்களது முக்கிய நோக்கமாக உள்ளது.இன்றோடு ரயில் தடத்தை சீரமைத்து புதன்கிழமை அன்று மீண்டும் ரயில் போக்குவரத்தை தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். பிரதமர் மோடி சம்பவ இடத்தில் ஆய்வு செய்துள்ளார். கவாச் பாதுகாப்பு அம்சத்தை குறை கூறுவதற்கு ஒன்றுமில்லை. அது இருந்திருந்தால் கூட விபத்தை தவிர்த்து இருக்க முடியாது. அதோடு, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சொன்னவை எதுவும் விபத்திற்கு காரணமில்லை” என்றார்.