Railway Update: ரயில் பயணிகளின் கவனத்திற்கு... இந்திய ரயில்வேயின் புத்தம்புது "அதிரடி குண்டு"
முன்பதிவு இல்லாத பெட்டிகள் மற்றும் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து, ஏசி பெட்டிகளை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
டிக்கெட் கட்டணத்தை நேரடியாக உயர்த்தாமல், மறைமுகமாக உயர்த்துவதற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்ல, முன்பதிவு இல்லாத பெட்டிகள் மற்றும் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து, ஏசி பெட்டிகளை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ரயில்வே வாரியத்திடம் இருந்து கடந்த மாதம் 6-ம் தேதியன்று, முக்கிய கடிதமொன்று தெற்கு ரயில்வே உட்பட பல்வேறு ரயில்வே அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், தற்போது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் ரயில்களின் வேகத்தை 130 கிலோமீட்டராக உயர்த்த இருப்பதால், அதற்கேற்ப ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏசி பெட்டிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படுவது வரவேற்கக்கூடியதுதான் என்றாலும், சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து, அந்தப் பெட்டிகளை, ஏசி பெட்டிகளாக மாற்றப் போகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சித் தரக்கூடிய செய்தியாகும்.
இது நேரடியாக, பயணிகள் அனைவரையும் ஏசி பெட்டிக்கான கட்டணத்தை செலுத்தும் நிலைக்குத் தள்ளும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தற்போது சென்னையிலிருந்து மதுரைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸில் முன்பதிவு இல்லாத பெட்டியில், 160 ரூபாயும், ஏசி இல்லாத படுக்கை பெட்டிகளில் 323 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது இந்தப்பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, ஏசி பெட்டிகளாக மாறினால், 3 டயர் ஏசி பெட்டிக்கு, 512 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். குறைந்த கட்டணம் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து, அதிக கட்டணம் கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது என்பது மறைமுகமாக கட்டண உயர்வுக்கு வழிவகுப்பதே என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பொதுவாக, எக்ஸ்பிரஸ் ரயில்களில் 20 பெட்டிகள் இருக்கும்.
இதில், தற்போது 7 சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், முன்பதிவு இல்லாத பெட்டிகள் 5, த்ரீ டயர் ஏசி பெட்டிகள் 6, டூ டயர் ஏசி பெட்டிகள் 2 என 20 பெட்டிகள் இருக்கும். இதில் விரைவில் மாற்றம் செய்யப்பட்டு, சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் 2, முன்பதிவு இல்லாத பெட்டிகள் 3 என குறைக்கப்படுகின்றன. 3 டயர் ஏசி பெட்டிகள் 10 ஆகவும், 2 டயர் பெட்டிகள் 4ஆகவும் உயர்த்தப்படுகின்றன. அதேபோல், முதல் தர வகுப்பு பெட்டியும் கொண்டு வரப்படுகிறது. இந்த மாற்றத்தினால், சாதாரண கட்டணத்தில் பயணிக்கும் லட்சக்கணக்கான பயணிகள், கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவது உறுதி என்பதுதான் யதார்த்தமாக இருக்கும். இந்தத் திட்டமானது தமிழகத்தைப் பொறுத்தமட்டில், அமலுக்கு வந்தால், பாண்டியன், முத்துநகர், பொதிகை, ராக்போர்ட், நீலகிரி, சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் ஏசி பெட்டிகள் வரும். சாதாரண மற்றும் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும். இதனால், ஏசி பெட்டிகளுக்கு ஏற்ப கூடுதல் கட்டணத்தை பெருவாரியானோர் செலுத்த வேண்டிய நிலை வரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை,
ரயில்வேயின் இந்த முடிவுக்கு, பாட்டாளி மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து இருப்பதுடன், ஏழை, எளிய மக்களுக்கு எதிரான இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அக் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தத் திட்டத்திற்கு, மற்ற கட்சிகளும் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன, ஏற்கெனவே, பல இடங்களில் சாதாரண ரயில்களை, எக்ஸ்பிரஸ் ரயில்கள் என மாற்றியதால், கட்டணங்கள் அதிகமாகி, பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில், சாதாரண பெட்டிகளைக் குறைத்து, ஏசி பெட்டிகளை அதிகமாக்குவதும் மறைமுக கட்டண உயர்வுதான் என விமர்சனம் எழப்போவது உறுதி.
மறுபக்கத்தில், விமான பயணத்தைப் போல, பயணிகளுக்கு ஏசி வசதியுடன் கூடிய சொகுசு பயணத்தைத்தருவது ஏற்கக்கூடியதுதானே என பாராட்டும் வரவேற்பும் வரக்கூடும். ஆனால், கட்டணம் கூடுதலாக கொடுக்க வேண்டி இருப்பதால், பலர் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் கள யதார்த்தம். இந்தப் பாதிப்பு, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு சென்று, வருவோருக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
டிக்கெட் கட்டணத்தை உயர்த்தவில்லை… ஆனால், விரைவில் கூடுதல் கட்டணத்தை கொடுக்க வேண்டிய நிலைக்கு ரயில் பயணிகள் தள்ளப்படுவார்கள் என்பதுதான் ரயில்வேயின் பிஸினஸ் தந்திரம் என வஞ்சப்புகழ்ச்சியாக பேசப்படுவது உறுதி.