செகண்ட் கிளாஸ்.. 27 கிமீ பயணம்.. லோக்கல் ட்ரெயினில் ஜாலியாக சென்ற ரயில்வேதுறை அமைச்சர்.. அடடே!
தெற்கு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்தில் இருந்து பாண்டுப் வரை ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பயணம் செய்தார்.
மும்பையில் லோக்கல் ட்ரெயினில் ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பயணம் செய்துள்ளார். மும்பை மக்களின் முதன்மை போக்குவரத்து வசதியாக கருதப்படும் ரயிலில் பயணம் செய்தபடி, அவர் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
லோக்கல் ரயிலில் மத்திய அமைச்சர் பயணம்:
தெற்கு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்தில் மதியம் 2.34 மணிக்கு புறநகர் ரயிலில் ஏறிய வைஷ்ணவ், 27 கிலோமீட்டர் பயணத்திற்குப் பிறகு 3.18 மணிக்கு பாண்டுப் ரயில் நிலையத்தில் இறங்கினார். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "விருது வழங்கும் விழாவிற்காக வந்த அமைச்சர், அம்பர்நாத் செல்லும் உள்ளூர் ரயிலின் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்தார்" என்றார்.
பயணத்தின்போது மத்திய அமைச்சருடன் உரையாடிய மக்கள், ரயிலின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அதேபோல, அடிக்கடி நிறுத்தப்படும் ரயில் சேவை குறித்தும் கவலை தெரிவித்தனர். பின்னர் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், "மும்பை பெருநகரப் பகுதியில் 16,240 கோடி ரூபாய் செலவில் 12 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மும்பையில் புது ரயில் திட்டங்கள்:
இந்த திட்டத்தின் மூலம் 301 கிலோமீட்டர் நீளமான ரயில் பாதைகள் சேர்க்கப்படும். பயணிகளின் அனுபவம் பெரிய அளவில் மேம்படுத்தப்படும். CSMT-குர்லா இடையே 5வது மற்றும் 6வது ரயில் பாதை, மும்பை சென்ட்ரல்-போரிவலி இடையே 6வது ரயில் பாதை, கல்யாண்-அசங்கான் இடையே 4வது ரயில் பாதை, கல்யாண்-பத்லாபூர் இடையே 3வது மற்றும் 4வது ரயில் பாதை, நிலஜே-கோபர் இரட்டை ரயில் பாதை, நைகான்-ஜூய்சந்திரா ரயில் பாதை மற்றும் ஐரோலி- கல்யாண் ரயில் பாதை ஆகிய திட்டங்கள் இதில் அடங்கும்.
Hon’ble Minister Shri @AshwiniVaishnaw engaged with the media and passengers onboard a local train to Ambernath in Maharashtra to discuss 12 major Mumbai-centric rail infrastructure projects. pic.twitter.com/IWEKhWuCib
— Ministry of Railways (@RailMinIndia) September 13, 2024
இந்தத் திட்டங்கள் முடிவடைந்தால், மும்பையின் முக்கிய போக்குவரத்து வசதியின் திறன் அதிகரிக்கும். அதிக ரயில்களை இயக்கலாம். ஒட்டுமொத்த பயண அனுபவமும் மேம்படும்" என்றார்.