ராகுல்காந்தியை தடுத்து நிறுத்திய மணிப்பூர் காவல்துறை: அடுத்து இதுதான் ப்ளான்!
இம்பாலுக்கு விமானம் மூலம் வந்த ராகுல் காந்தி, சுராசந்த்பூருக்குச் செல்லும் வழியில் அங்கிருக்கும் ராணுவ முகாம்களில் மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.
மணிப்பூரில் தொடர்ந்து வரும் கலவர சம்பவங்கள் நாட்டையை உலுக்கி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள், தங்களின் சொந்த வீடுகளில் வெளியேறி ராணுவ முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் 55 சதவிகித்திற்கு மேல் இருக்கும் மெய்தி சமூகத்தினர், 10 சதவிகித்திற்கு மேல் இருக்கும் குகி சமூகத்தினர் ஆகியோருக்கு இடையே வன்முறை நிகழ்ந்து வருகிறது.
மணிப்பூர் இனக்கலவரம்:
தங்களுக்கு பழங்குடி அந்தஸ்து வேண்டும் என மெய்தி சமூகத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதற்கு குகி பழங்குடி சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த இரு வேறு பிரவினருக்கிடையே நடக்கும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகிறது.
வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ராகுல் காந்தி மணிப்பூர் செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி, வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு ராகுல் காந்தி சென்ற போது, அவரின் கான்வாய் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது.
ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர் மூலம் செல்லும் ராகுல் காந்தி:
முன்னதாக இம்பாலுக்கு விமானம் மூலம் வந்த ராகுல் காந்தி, சுராசந்த்பூருக்குச் செல்லும் வழியில் அங்கிருக்கும் ராணுவ முகாம்களில் மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். இந்த ஆண்டு மே மாதம் இனக்கலவரம் தொடங்கியதில் இருந்து சுமார் 50,000 பேர் இப்போது மாநிலம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
ராகுல் காந்தியின் கான்வாய் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து காவல்துறை அதிகாரிகள் பேசுகையில், "பாதுகாப்பு காரணங்களுக்காக இம்பாலில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விஷ்ணுபூரில் ராகுல் காந்தியின் கான்வாய் நிறுத்தப்பட்டது. சாலை வழியாக சுராசந்த்பூர் வரை பயணம் செய்வதற்கு பதிலாக ஹெலிகாப்டரில் செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். எனவே முன்னெச்சரிக்கையாக, கான்வாயை விஷ்ணுபூரில் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டோம்" என்றார்.
மணிப்பூர் பிரச்னைக்கு சுமூகமான தீர்வு காண சமீபத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அங்கு, குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை" என திட்டவட்டமாக கூறினார்.
அனைத்து கட்சி கூட்டத்தில், 18 அரசியல் கட்சிகள், வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த நான்கு எம்.பி.க்கள் மற்றும் இரண்டு முதலமைச்சர்கள் மூன்று மணி நேரம் நீடித்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் நிலவி வரும் நிலைமையை முதல் நாள் முதலே பிரதமர் நரேந்திர மோடி கண்காணித்து வருவதாகவும், பிரச்னைக்கு தீர்வு காண முழு கவனமுடன் எங்களை வழிநடத்தி வருவதாகவும் அனைத்து கட்சி கூட்டத்தில் உள்துறை அமைச்சர் கூறினார்.