(Source: ECI/ABP News/ABP Majha)
Rahulgandhi: தகுதிநீக்கம் திரும்பப்பெறப்படுமா? அவதூறு வழக்கில் மேல்முறையீடு.. ராகுல்காந்தி எடுக்கபோகும் ஆயுதம்..!
சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு, தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ்மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, "எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?" என கூறியிருந்தார்.
ராகுல்காந்தி தகுதிநீக்கம்:
ராகுல்காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இது தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேல்முறையீடு:
இது தொடர்பாக ராகுல் காந்தி தாக்கல் செய்யப்பட உள்ள மனுவில், "அவதூறு வழக்கில் குற்ற தண்டனை விதித்த மாஜிஸ்திரேட்டின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் விசாரணை முடியும் வரை இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 8(3)இன் கீழ், எம்பி ஒருவருக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் குற்ற தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில், அவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். இந்த சட்டத்தின் கீழ்தான் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் கட்சி சார்பற்று ராகுல் காந்திக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மூன்றாவது அணிக்கான முயற்சியை மேற்கொண்டு வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆகியோர் தகுதி நீக்க விவகாரத்தில் பாஜகவை கடுமையாக சாடியிருந்தனர்.
ராகுல் காந்திக்கு ஆதரவாக திரண்ட உலக நாடுகள்:
அதேபோல, உலக நாடுகளும் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளன. செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக பேசிய ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "இந்திய எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு எதிராக வந்துள்ள நீதிமன்ற தீர்ப்பு, நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து அறிவோம். எங்களுக்கு தெரிந்தவரை, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் நிலையில் ராகுல் காந்தி இருக்கிறார்.
இந்த தீர்ப்பு நிலைத்திருக்குமா என்பதும், தகுதி நீக்கம் செய்வதற்கு ஏதேனும் அடிப்படை உள்ளதா என்பதும் பிறகுதான் தெளிவாக தெரியவரும். நீதித்துறை சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளின் தரநிலைகள் இந்த வழக்கில் பொருந்தும் என்று ஜெர்மனி எதிர்பார்க்கிறது" என்றார்.
"ராகுல் காந்தி வழக்கை கவனித்து வருகிறோம். கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக விழுமியங்களுக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் இந்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து ஈடுபடுகிறோம். சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பது எந்தவொரு ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாகும்" என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முதன்மை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்திருந்தார்.