கர்நாடகாவுல நடந்தது இங்க நடக்கும்... தெலங்கானாவை டார்கெட் செய்யும் ராகுல் காந்தி..!
பாஜக எதிர்ப்பில் தீவிரமாக இருந்த சந்திரசேகர ராவின் நடவடிக்கைகளில் மாற்றம் தென்பட தொடங்கியுள்ளது.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ். தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி மேற்கொண்டவர்.
கேசிஆரின் நடவடிக்கைகளில் மாற்றம்:
ஆனால், இப்போது கதையே வேறு. ஒரு காலத்தில் பாஜக எதிர்ப்பில் தீவிரமாக இருந்த சந்திரசேகர ராவின் நடவடிக்கைகளில் மாற்றம் தென்பட தொடங்கியுள்ளது. பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்த கே.சி.ஆர், பிரதமர் மோடியை நல்ல நண்பர் என சமீபத்தில் குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது.
இதை தொடர்ந்து, 15 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட பாட்னா கூட்டத்தை புறக்கணித்தது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்தது. இப்படிப்பட்ட நிலையில், கே.சி.ஆரின் கட்சி இடம்பெறும் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறாது என ராகுல் காந்தி தெரிவிதத்துள்ளார்.
கம்மம் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, கே.சி.ஆரின் பாரத் ராஷ்டிர சமிதியை பாஜகவின் பி டீம் என விமர்சித்துள்ளார். "கே.சி.ஆர் மற்றும் அவரது கட்சித் தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்களை பாஜகவுக்கு அடிபணியச் செய்துள்ளன.
தெலங்கானாவை டார்கெட் செய்யும் ராகுல் காந்தி:
மேலும், பிஆர்எஸ் கட்சி (பாரத ராஷ்டிர சமிதி) இடம்பெறும் எந்தக் கூட்டணியிலும் காங்கிரஸ் இணையாது என்று மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளேன். பிஆர்எஸ் என்றால் பாஜகவின் உறவினர் கட்சி என்று அர்த்தம். கே.சி.ஆர் தன்னை ராஜா என்றும், தெலங்கானா தனது ராஜ்ஜியமாகவும் நினைக்கிறார்.
நாடாளுமன்றத்தில் பாஜகவை காங்கிரஸ் எப்போதும் எதிர்த்து வந்துள்ளது. ஆனால் கேசிஆரின் கட்சி பாஜகவின் பி டீம். தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் ரிமோட் கண்ட்ரோலை பிரதமர் நரேந்திர மோடி கையில் வைத்துள்ளார். ஊழல் மற்றும் ஏழைகளுக்கு எதிரான அரசாங்கத்திற்கு எதிராக காங்கிரஸ் சமீபத்தில் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலில் போராடியது. மாநிலத்தில் ஏழைகள், ஓபிசிகள், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் ஆதரவுடன் நாங்கள் அவர்களை தோற்கடித்தோம்.
தெலங்கானாவிலும் அப்படி ஒன்று நடக்கப் போகிறது. ஒரு பக்கம் அரசின் பணக்காரர்களும், அதிகாரம் படைத்தவர்களும் இருப்பார்கள். இன்னொரு பக்கம் ஏழைகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், விவசாயிகள் மற்றும் சிறு கடைக்காரர்கள் எங்களுடன் இருப்பார்கள். கர்நாடகாவில் நடந்தது தெலங்கானாவில் மீண்டும் நிகழும்" என்றார்.
இந்தாண்டின் இறுதியில் தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. பாஜகவுடன் கே.சி.ஆர் நெருக்கம் காட்டுவது அதிகரித்தால் இது அவரின் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. குறிப்பாக, அண்டை மாநிலமான கர்நாடகாவில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு, இது நல்ல வாய்ப்பாக மாறிவிடும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.