Rahul Gandhi: "சகோதரி வீட்டுக்கு சாப்பிட வாங்க" - விவசாயிகளுடன் டிராக்டர் ஓட்டி மகிழ்ந்த ராகுல் காந்தி ஜாலி டாக்
உரையாடலை தொடர்ந்து, டிராக்டர் மூலம் நிலத்தை உழுது, நெல்லை பயிரிட்டு விவசாயிகளுடன் சேர்ந்து உணவை உண்டு மகிழ்ந்துள்ளார் ராகுல் காந்தி.
கடந்த 9 ஆண்டுகளில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு காங்கிரஸ் பெரும் சரிவை சந்தித்த நிலையில், கட்சியை மீட்டெக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர் முயற்சிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கடந்த ஜனவரி மாதம், இந்திய ஒற்றுமை நடைபயணத்தை நிறைவு செய்தார். நடைபயணத்தில் பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மக்களின் குறைகளை கேட்டறிந்து வரும் ராகுல் காந்தி:
இதை தொடர்ந்து, கர்நாடக தேர்தலை முன்னிட்டு உணவை டெலிவரி செய்யும் நபருடன் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். கடந்த மே மாதம், ஹரியானா மாநிலம் அம்பாலாவுக்கு லாரி டிரைவர்களுடன் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். கடந்த மாதம், டெல்லியில் இரு சக்கர வாகனத்தை பழுது பார்க்கும் கடைக்கு சென்றார்.
அதன் தொடர்ச்சியாக, தற்போது, ஹரியானா மாநிலம் சோனிபட்டில் விவசாயிகளை சந்தித்து பேசியுள்ளார். விவசாயிகள், ராகுல் காந்தி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற உரையாடல் அவரது யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. உரையாடலை தொடர்ந்து, டிராக்டர் மூலம் நிலத்தை உழுது, நெல்லை பயிரிட்டு அவர்களுடன் சேர்ந்து உணவை உண்டு மிகழ்ந்துள்ளார்.
விவசாயிகளுடன் டிராக்டர் ஓட்டி மகிழ்ச்சி:
உரையாடலின்போது, பிரியங்கா காந்தி வீட்டுக்கு உணவு உண்ண வரும்படி பெண் விவசாயிகளை அழைத்த ராகுல் காந்தி, தனது வீட்டை அரசு பறித்துவிட்டதாக தெரிவித்தார்.
"இந்தியாவை ஒன்றிணைப்பதில் விவசாயிகள் பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளனர். அவர்கள் விளையும் பயிர்கள் நாட்டின் ஒவ்வொரு இந்தியரின் தட்டுகளிலும் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது. ஆனால், அவர்களின் எளிமைக்கு சரியான பலன்களும் மரியாதையும் கிடைக்கவில்லை" என விவசாயிகள் குறித்து ராகுல் காந்தி வீடியோவில் பேசியுள்ளார்.
"விவசாயிகள் சொல்வதை கேட்டால் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்"
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவின் விவசாயிகள் எளிமையானவர்கள். உண்மையுள்ளவர்கள். விவேகமானவர்கள். தங்களின் உரிமைகள் என்ன என்பது அவர்களுக்கு தெரிகிறது. தேவைப்படும் போது, அவர்கள் வேளான் சட்டங்களுக்கு எதிராக உறுதியாக நிற்கிறார்கள்.
அதோடு குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் காப்பீட்டுக்கான சரியான கோரிக்கையையும் எழுப்புகின்றனர். அவர்கள் சொல்வதைக் கேட்டு, அவரது கருத்தைப் புரிந்து கொண்டால், நாட்டின் பல பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்" என்றார்.
யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட வீடியோவில், சஞ்சய் மாலிக் மற்றும் தஸ்பீர் குமார் என்ற இரண்டு விவசாயிகளுடன் ராகுல் உரையாடுவதைக் காணலாம். ராகுல் காந்தியிடம் பேசிய சஞ்சய், "அரசாங்கத்திடம் இருந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளேன். தஸ்பீர் என்னுடன் பணிபுரிகிறார்" என்றார்.
இதை தொடர்ந்து சஞ்சயிடம் பேசிய ராகுல் காந்தி, "எனவே இந்த தனியார்மயமாக்கல் எல்லாம், யாருக்கு லாபம் என்று நினைக்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சஞ்சய், "பணக்காரர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் இதனால் பலன் அடைகிறார்கள் என்று நினைக்கிறேன்" என்றார்.