Rahul Gandhi Disqualified: என்ன காரணங்களுக்காக எம்.பி. தகுதிநீக்கம் செய்யப்படுவார்? சட்டம் சொல்வது என்ன? - ஓர் அலசல்
நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் குறித்து இந்திய அரசியலமைப்பு சட்டம் தெரிவித்துள்ளதை காண்போம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எதன் அடிப்படையில் தகுதி செய்யப்படுகிறார் என்பது குறித்தும், ராகுல் காந்தி எதன் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்தும் தெரிந்து கொள்வோம்
நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் குறித்து இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி தெரிவித்துள்ளதாவது:
- இந்திய குடிமகனாக இருக்க தகுதி இல்லாதவர் அல்லது வேறு நாட்டின் குடியுரிமையை பெற்றவராக இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
- ஆதாயம் தரும் பதவி ( Office of Profit ) நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் ஒருவர், எம்.பி பதவி அல்லாமல் வேறு ஏதேனும் அரசு அலுவலகங்கள் மூலம் நிதி ஆதாயம் அடைந்தால், தகுதி நீக்கம் செய்ய்யப்படுவார். அதாவது அரசு அலுவலகங்களில் இரட்டை பதவி வகிக்க கூடாது என்பதன் அடிப்படையில் இவ்விதி குறிப்பிடுகிறது. ஆனால், குறிப்பிட்ட அலுவலகங்களில் பங்கு எடுக்கலாம் என நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்பட்டால், தகுதி நீக்கம் சட்டத்திலிருந்து விலக்கு பெறலாம்.
- தன் சொந்த விவகாரங்களை நிர்வகிக்க இயலாத, மன திடம் கொண்டவராக இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
- கட்சி தாவல் தடை சட்டம்: கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் வேறு கட்சியில் சேர்ந்தால் தகுதி நீக்கம் செய்யபடுவார்.
- மேலும் பாராளுமன்றத்தால் தகுதி நீக்கம் தொடர்பாக இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் நீக்கம் செய்யப்படுவார்.
மக்கள் பிரதிநித்துவ சட்டம் 1951:
- எந்தக் குற்றத்திற்காகவும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றிருக்கக் கூடாது.
- சில தேர்தல் முறைகேடுகள் அல்லது தேர்தல்களில் நடந்த ஊழல்கள் தொடர்பாக நீதிமன்றத்திலோ அல்லது தேர்தல் தீர்ப்பாயத்திலோ அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கக் கூடாது.
- ஊழல் அல்லது அரசு பணிகளில் இருந்து விசுவாசமின்மைக்காக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கக் கூடாது.
- அவர் தனது தேர்தல் செலவுகளை உரிய நேரத்தில், சட்டப்படி செலுத்தத் தவறியிருக்கக் கூடாது.
- அரசு ஒப்பந்தங்கள், அரசுப் பணிகளை நிறைவேற்றுதல், சேவைகள் ஆகியவற்றில் அவருக்கு ஆர்வம் இருக்கக் கூடாது.
- தீண்டாமை குற்றத்தில் தண்டிக்கப்பட்டவராக இருக்க கூடாது ( சதி, வரதட்சனை உள்ளிட்டவை )
ராகுல் தகுதி நீக்கம்:
அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது,
Rahul Gandhi - Congress MP from Wayanad, Kerala - disqualified as a Member of Lok Sabha following his conviction in the criminal defamation case over his 'Modi surname' remark. pic.twitter.com/SQ1xzRZAot
— ANI (@ANI) March 24, 2023
அதில் தெரிவித்துள்ளதாவது, கேரள வயநாடு தொகுதியைச் சேர்ந்த எம்.பி ராகுல் காந்தி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 8(3)இன் கீழ், " இரண்டு ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுவதால், நேற்றே தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என தெரிவித்துள்ளது.
அவதூறு வழக்கில் மேல்முறையீடு செய்வதற்காக ராகுல்காந்திக்கு 30 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள், அவர் மேல்முறையீடு செய்து நிரபராதி என நிரூபிக்கப்படாவிட்டால், 2 வருட சிறை தண்டனை மற்றும் 2 வருட சிறை தண்டனைக்கு பின்பு, 6 வருடம் தேர்தலில் பங்கேற்க முடியாது சூழல் உருவாகும். மேலும், அடுத்த வருடம் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.
இந்நிலயில், ராகுல் தரப்பினர் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, கூடிய விரைவில் மேல்முறையீட்டுக்காக நீதிமன்றத்தை நாடவுள்ளனர் என கூறப்படுகிறது.