RahulGandhi Disqualified: எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம்; ராகுல்காந்தியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
"ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஏதேனும் குற்றத்திற்காக குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில் அதே தருணத்திலேயே அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்"
அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் இருவேறு கருத்துகள் நிலவி வருகிறது.
தகுதி நீக்கம் செல்லுமா? செல்லாதா?
ஒன்று, இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட உடன், அவரை யாரும் தகுதி நீக்கம் செய்ய வேண்டாம். அவரின் எம்.பி. பதவி தானாக தகுதி நீக்கம் ஆகிவிடும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், சில சட்ட வல்லுநர்கள், வேறு விதமான கருத்துகளை முன்வைக்கினர். தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்து தகுதி நீக்க நடவடிக்கையை தள்ளி போடலாம் என கூறுகின்றனர்.
அவதூறு வழக்கில் மேல்முறையீடு செய்வதற்காக ராகுல்காந்திக்கு பிணை வழங்கப்பட்டு அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை 30 நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அவரை தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு காரணமாக மாறியுள்ளது.
காலியாகும் வயநாடு தொகுதி:
இனி, அவரின் வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். இதையடுத்து, அங்கு தேர்தல் நடத்தப்படும். அதன் தொடர்ச்சியாக, மத்திய டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்யும்படி ராகுல் காந்தி கேட்டு கொள்ளப்படுவார்.
1951, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 8(3)இன் கீழ், "ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஏதேனும் குற்றத்திற்காக குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில் அதே தருணத்திலேயே அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்" என கூறுகிறது.
ராகுல் காந்தியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை:
இனி, தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து ராகுல்காந்தி நீதிமன்றத்திற்கு செல்லலாம். இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், "தேர்தல் ஆணையத்திடம் ஆலோசனை மேற்கொண்ட பிறகு குடியரசு தலைவரால் மட்டுமே எம்பிக்களை தகுதி நீக்கம் செய்யலாம்" என கூறியுள்ளனர்.
வைக்கப்படும் விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ள பாஜக எம்பி மகேஷ் ஜெத்மலானி, "சட்டத்தின்படி, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த முடிவு பற்றி சபாநாயகரிடம் தெரிவிக்க வேண்டும். தற்போதைய நிலைமையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்பியே" என்றார்.
இதுகுறித்து விரிவாக பேசியுள்ள முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான கபில்சிபல், "இரண்டு ஆண்டு சிறை தண்டனையால் அவரின் எம்பி பதவி தானாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டது. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும் அது போதாது. அவர் குற்றவாளி என்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்க வேண்டும். அப்படி, குற்றவாளி என்ற தீர்ப்புக்கு தடை வாங்கினால் மட்டுமே அவரால் எம்.பி.யாக தொடர முடியும்" என்றார்.
இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றமும் ரத்து செய்யாவிட்டால், அடுத்த 8 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தியும் தேர்தலில் போட்டியிட முடியாது. உயர் நீதிமன்றம் ரத்து செய்ய மறுக்கும்பட்சத்தில், ராகுல் காந்தி அடுத்து உச்ச நீதிமன்றத்திற்கு செல்லலாம்.