"அவமானப்படுத்துவது பலம் அல்ல.. பலவீனத்தின் அறிகுறி" ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக களமிறங்கிய ராகுல் காந்தி!
தன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள அரசு பங்களாவில் இருந்து ஸ்மிருதி இரானி உள்பட நான்கு முன்னாள் மத்திய அமைச்சர்கள் நேற்று காலி செய்தனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், அமேதி தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் கிஷோரி லால் ஷர்மாவிடம் தோல்வியை சந்தித்த ஸ்மிருதி இரானிக்கு, இந்த முறை மத்திய அமைச்சரவை பதவி வழங்கப்படவில்லை.
புதிய அமைச்சர்களுக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட வேண்டியிருந்ததால், அமைச்சரவையில் இடம்பெறாதவர்கள் பங்களாவை காலி செய்ய வேண்டியிருந்தது. அந்த வகையில், மத்திய வீட்டு வசதித்துறை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கு 3ஆவது பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, இந்த பங்களாவில் முன்னாள் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சங் தோமர் வசித்து வந்தார். முன்னாள் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, 28 துக்ளக் கிரசன்ட் பகுதியில் அமைந்துள்ள அரசு பங்களாவை காலி செய்தார்.
தேர்தலில் தோல்வி அடைந்து, அரசு பங்களாவை காலி செய்த ஸ்மிருதி இரானி குறித்து சிலர் அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Winning and losing happen in life.
— Rahul Gandhi (@RahulGandhi) July 12, 2024
I urge everyone to refrain from using derogatory language and being nasty towards Smt. Smriti Irani or any other leader for that matter.
Humiliating and insulting people is a sign of weakness, not strength.
"வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சகஜம். ஸ்மிருதி இரானிக்கு எதிராகவோ அல்லது வேறு எந்த தலைவருக்கு எதிராகவோ இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதையும் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அவமானப்படுத்துவதும் அவமதிப்பதும் பலம் அல்ல. பலவீனத்தின் அறிகுறி" என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் போட்யிட்ட ராகுல் காந்தியை எதிர்த்து களம் கண்டு வெற்றி பெற்றவர் ஸ்மிருதி இரானி. அப்போதிலிருந்தே ராகுல் காந்தி மீது ஸ்மிருதி இரானி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இருப்பினும், வயநாடு தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார் ராகுல் காந்தி. இதற்கிடையே, அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற காரணத்தால் அரசு பங்களாவை ராகுல் காந்தி காலி செய்ய வேண்டியிருந்தது. அந்த சமயத்தில், ராகுல் காந்தியை கடுமையாக சாடியிருந்தார் ஸ்மிருதி இரானி.