Jaishankar Condemns China: இந்தியாவை திருட பார்க்கும் சீனா.. வெளியான புதிய வரைபடத்திற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்
அருணாச்சல பிரதேசத்தை தங்களது நாட்டுடன் சேர்த்து சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்திற்கு, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தை தங்களது நாட்டுடன் சேர்த்து சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்திற்கு, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சீனா வெளியிட்ட வரைபடம்:
சீனாவின் வளங்களை வெளிப்படுத்தும் விதமாக அந்நாடு நிலையான (standard) வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அருணாச்சல பிரதேச மாநிலம் முழுவதும் சீனாவை சேர்ந்தது என்பதை போன்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அருணாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த 11 பகுதிகளின் பெயரை மாற்றியதற்கே இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், இந்தியாவிற்கு சொந்தமான அருணாச்சல பிரதேச மாநிலம் முழுவதையுமே தங்களுக்கு சொந்தமானது என சீனா வெளியிட்டுள்ள வரைபடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்சங்கர் கண்டனம்:
சீனாவின் செயல்பாடு தொடர்பாக பேசியுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் “இது சீனாவின் பழைய பழக்கம். உரிமை இல்லாத பகுதிகளை தங்களுக்கானது என சீனா கோருவது தொடர்கதையாக உள்ளது. நமது பகுதிகள் என்ன என்பதில் இந்த அரசு மிக தெளிவாக உள்ளது. சீனா கூறியிருப்பது அபத்தமானதாக உள்ளது. வரைபடத்தில் சேர்த்துக்கொண்டு உரிமை கோருவதன் மூலம், அடுத்த நாட்டின் பகுதிகள் சீனாவுடையது ஆகாது’’ என்றார்.
வெளியுறவு அமைச்சகம் அதிரடி:
இதுதொடர்பாக பேசியுள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “சீனாவின் வரைபடம் குறித்து ஜனநாயக முறையில் அந்நாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அடிப்படையற்ற அவர்களின் கூற்றுகளை நாங்கள் நிராகரிக்கிறோம். சீனாவின் இந்த நடவடிக்கை எல்லை பிரச்னைக்கான தீர்வுகளை மேலும் சிக்கலாக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் சொன்னது?
அண்மையில் தென்னாப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில், பிரதமர் மோடி சீன அதிபரை சந்தித்து மரியாதை நிமித்தமாக பேசினார். அப்போது, ”இந்தியா-சீனா எல்லை பகுதிகளில் தீர்க்கப்படாத பிரச்னைகள் கவலையளிக்கிறது. இந்தியா-சீனா உறவு இயல்பு நிலைக்கு திரும்ப எல்லையில் அமைதி நிலவுவது முக்கியம்” என மோடி வலியுறுத்தியதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் தான் இந்திய மாநிலத்தை உரிமை கோரி சீனா வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
ஸ்டேண்டர்ட் மேப் சொல்வது என்ன?
அந்த வரைபடத்தில் அருணாச்சலபிரதேசம் மட்டுமின்றி தைவான் மற்றும் சர்ச்சைக்குரிய தெற்கு சீன கடல் பகுதியையும், தனது பகுதியாக சீனா தெரிவித்துள்ளது. தெற்கு சீன கடலின் பெரும் பகுதியை தனது பகுதியாக சீனா உரிமை கொண்டாடியுள்ளது. இந்த வரைபடம் இயற்கை வளங்கள் மேலாண்மை, சூழலியல் மற்றும் நாகரீகங்களை உருவாக்க உதவும் எனவும் சீனா தெரிவித்துள்ளது. இந்த தெற்கு சீன கடல் பகுதியில் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே ஆகிய நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. இந்த நிலையில் சீனா வெளியிட்டுள்ள இந்த புதிய வரைபடத்தின் நோக்கம் என்பது, அப்பகுதிகளில் உள்ள வளங்களை கொள்ளையடிப்பது தான் என கூறப்படுகிறது.