உச்சக்கட்ட பதற்றம்... போராட்டக்களமாக மாறிய ராஜஸ்தான்.. தெருக்களில் இறங்கி போராடும் ராணுவ வீரர்களின் மனைவிமார்கள்..!
மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிமார்கள் ராஜஸ்தானில் கடந்த இரண்டு வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு, மக்களவை தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பாதுகாப்பு வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், இந்திய ராணுவத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
போராட்டக்களமாக மாறிய ராஜஸ்தான்:
இதில், மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிமார்கள் ராஜஸ்தானில் கடந்த இரண்டு வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த ராணுவ வீரரின் வாரிசு மட்டும் இன்றி குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும் அரசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று, ஜெய்ப்பூரில் உள்ள முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் வீட்டிற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட கைம்பெண்களை போலீசார் அப்புறப்படுத்தி அந்தந்த குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
வன்முறையாக மாறிய போராட்டம்:
இதற்கிடையே, பாஜக மூத்த மூத்த தலைவர் கிரோடி லால் மீனாவை ராஜஸ்தான் போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த சூழ்நிலையில், ஜெய்ப்பூரில் இன்று அக்கட்சியினர் மீண்டும் போராட்டம் நடத்தினர். இன்று, போராட்டக்காரர்கள் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்ற நிலையில், போராட்டம் வன்முறையாக மாறியது.
போராட்டக்காரர்கள் கற்களை வீசி போலீஸ் அமைத்த தடுப்புகளை உடைத்த நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்ட வர போலீசார் தடியடி நடத்தினர்.
முந்தைய நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் மனைவிமார்களை முதலமைச்சர் கெலாட் இன்று சந்தித்தார். தங்கள் குழந்தைகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் கைம்பெண்கள் கெலாட்டை சந்திக்கவில்லை.
காங்கிரஸ் vs பாஜக:
இந்த விவகாரம், பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான நேரடி மோதலாக மாறியுள்ளது. இருவரும், மாறி மாறி பரஸ்பரம் விமர்சித்து வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் மீனா கைம்பெண்களை அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்துவதாக அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ள நிலையில், காவல்துறை தன்னை கொல்ல முயற்சிப்பதாக மீனா கூறியுள்ளார்.
காங்கிரஸ் அரசை கடுமையாக சாடிய பாஜக, இந்த நடவடிக்கை கைம்பெண்களுக்கு அவமானம் என்றும், குடும்பங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டியது.
விமர்சனங்களுக்கு பதில் அளித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், "வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிகளின் பிரச்னைகளை உணர்வுப்பூர்வமாக கேட்க வேண்டும்.
சாலை அமைத்தல், வீடுகள் அமைத்தல், சிலைகள் நிறுவுதல் போன்ற கோரிக்கைகளை இன்றும் நிறைவேற்ற முடியும் என்று நான் நம்புகிறேன். அவர்களின் கோரிக்கைகளை நாங்கள் கேட்கத் தயாராக இல்லை என்று ஒரு செய்தி வெளியே வரக்கூடாது. அது வேறு விஷயம். அவர்களின் பிரச்சினைகளை ஒப்புக்கொள்கிறீர்களா இல்லையா, ஆனால், அவர்களின் கோரிக்கைகளை கேட்கும் போது ஒருவர் தனது ஈகோவை ஒதுக்கி வைக்க வேண்டும்" என்றார்.
கோரிக்கைகள்:
கருணை அடிப்படையில் தங்கள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி தங்கள் உறவினர்களுக்கும் அரசு வேலை கிடைக்கும் வகையில் விதிகளை மாற்றக் கோரி, கைம்பெண்கள் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது கிராமங்களில் சாலைகள் அமைக்க வேண்டும், தியாகிகளின் சிலைகளை நிறுவ வேண்டும் என்பது அவர்களின் மற்ற கோரிக்கைகளாகும்.