விநாயகர் சிலைகள் வைக்க தடையில்லை: ஆளுநர் தமிழிசை பேட்டி!
புதுச்சேரி, தெலங்கானாவில் விநாயகர் சிலை வைக்க எந்தத் தடையுமில்லை என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி, தெலங்கானாவில் விநாயகர் சிலை வைக்க எந்தத் தடையுமில்லை என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 25-வது வாராந்திர கொரோன மேலாண்மை சீராய்வுக் கூட்டம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், பல்வேறு துறை சார்ந்த செயலர்கள், சுகாதாரத்துறை இயக்குநர், ஜிப்மர் இயக்குநர் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து கொரோனா தொற்றுக் காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்குத் துணைநிலை ஆளுநர் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார். மேலும் கொரோன விழிப்புணர்வு ஓவியப் போட்டிகளில் பரிசு பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழஙகினார்.
பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: கடந்த 2, 3 நாட்களாக கொரோன பாதிப்பு 100-ஐத் தாண்டியுள்ளது. இதற்காக யாரும் பயப்படப்பட வேண்டாம். ஆனால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொதுமக்ளுக்காகப் பல முயற்சிகளைச் செய்கிறோம். பல்வேறு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டும் தான் மூன்றாவது அலை வந்தாலும் பயமின்றி இருக்க முடியும். 18 – 45 வயதுக்குள் உள்ளவர்கள் தயக்கமின்றி தடுப்பூசி எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இன்னும் தயக்கம் இருக்கிறது. இது தேவையில்லாதது. எனவே, அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.
புதுச்சேரியில் கட்டுப்பாடுடன் கூடிய தளர்வுகள்தான் உள்ளன. மக்கள் இடைவெளி விட்டுக் கோயில்களுக்கு வருகிறார்கள். இதனால் கோயில்களை முற்றிலும் மூட வேண்டிய அவசியமில்லை. பரிட்சார்த்த முறையில் திறந்து வைத்துள்ளோம். எல்லா விழாக்களிலும், பண்டிகை நாட்களிலும் கோயில்கள் திறந்துதான் இருந்தன. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கொரோனா கொஞ்சம் அதிகமாகியுள்ளது.
ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதம் பேரும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான். நம்மைப் பொறுத்தவரையில் கொரோனாவை அறிவியல் ரீதியில் நாம் அணுகிக் கொண்டிருக்கிறோம். ஆகவே, கட்டுப்பாடுடன் மக்கள் இருந்தால் பயப்படத் தேவையில்லை. இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
அப்போது தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து ஆளுநர் தமிழிசையிடம் கேட்டதற்கு, இன்னொரு மாநிலத்தின் முடிவை நாம் கூறமுடியாது. தெலங்கானாவில் விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியிலும் விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் விழிப்புடன் இறைவனை வழிபடும்போது ஏன் தடை விதிக்க வேண்டும்? மக்கள் கட்டுப்பாட்டுடன் இறைவனை வணங்க வேண்டும் என்று நினைக்கும்போது அரசுகள் அதற்கு செவி சாய்ப்பதில் தவறில்லை. அப்படித்தான் புதுச்சேரி, தெலங்கானாவில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளித்துள்ளோம். எனவே, நான் தொடர்புடைய இரு மாநிலங்களிலும் விநாயகர் சிலை வைப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. தெலங்கானாவில் மிக உயரமான விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. அதனை 10-ம் தேதி நான்தான் தொடங்கி வைக்கிறேன் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.