Sakshi Malik : இந்தியாவின் மானத்தை வாங்காதீங்க.. விமர்சித்த PT உஷா...கண்ணீர் மல்க பதிலளித்த ஒலிம்பிக் வீராங்கனை
மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகட், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், ரவி தஹியா, தீபக் புனியா ஆகியோர் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மல்யுத்த வீராங்கனைகள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் கூறியது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, இந்த சம்பவம் குறித்து விசாரணையை மேற்பார்வை செய்ய மத்திய அரசு ஒரு குழு அமைத்தது.
போராட்டத்தில் இறங்கிய மல்யுத்த வீராங்கனைகள்:
மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து வரும் ஒரு மாதத்திற்கு இந்தக் குழு விசாரிக்கும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த குழு, தனது அறிக்கையை கடந்த 5ஆம் தேதி, விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் சமர்பித்தது.
ஆனால், ஆறு பேர் கொண்ட குழுவின் முடிவுகளை அமைச்சகம் இன்னும் பகிரங்கப்படுத்தவில்லை. இதற்கிடையே, மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகட், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், ரவி தஹியா, தீபக் புனியா ஆகியோர் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் புகார் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
PT உஷா விமர்சனம்:
இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷாவுக்கும் கடிதம் எழுதியுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளை கடுமையாக சாடிய பி.டி. உஷா, "வீரர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியிருக்கக் கூடாது. அவர்கள் குறைந்தபட்சம் குழுவின் அறிக்கைக்காக காத்திருந்திருக்க வேண்டும்.
அவர்கள் செய்தது விளையாட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல. இது எதிர்மறையான அணுகுமுறை. இந்த போராட்டம், ஒழுங்கீனமானது" என்றார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளை பி.டி. உஷா விமர்சித்ததிற்கு, கண்ணீர் மல்க பதில் அளித்துள்ளார் சாக்ஷி மாலிக்.
கண்ணீர் மல்க பதிலளித்த சாக்சி மாலிக்:
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெண் தடகள வீராங்கனையாக இருந்த போதிலும், அவர் (PT உஷா) மற்ற பெண் விளையாட்டு வீரர்களின் பேச்சைக் கேட்பதில்லை. இங்கே ஒழுக்கமின்மை எங்கே வந்தது. நாங்கள் நிம்மதியாக இங்கே அமர்ந்திருக்கிறோம். தன் அகாடமி குறித்து ஊடகங்கள் முன் அவரே (PT உஷா) கதறி அழுது இருக்கிறார்" என்றார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், "நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு நரேந்திர மோடி அரசு சிறப்பான பணிகளை செய்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் அரசு பெருமளவு செலவு செய்கிறது. ஏறக்குறைய 3,000 வீரர்கள் தங்குவதற்கும், தங்குவதற்கும், பயிற்சிக்கும் ₹5 லட்சம் பெறுகிறார்கள். தனிப்பட்ட செலவுக்கு ₹1.20 லட்சம் பெறுகிறார்கள்.
சில மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் (டெல்லியில்) அமர்ந்திருக்கின்றனர். அவர்களிடம் பேசியது யார்? இமாச்சலப் பிரதேசத்தில் எனது அனைத்து நிகழ்ச்சிகளையும் விட்டுவிட்டு 12 மணிநேரம் கேட்டேன். ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம், அடுத்த நாள் ஐந்து மணி நேரம். இரவு வெகுநேரம் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினோம்.
#WATCH | Delhi: "Being a woman athlete, she (PT Usha) isn't listening to other women athletes. Where's indiscipline here, we are sitting here peacefully...She herself cried in front of the media regarding her academy": Protesting wrestlers hit back at PT Usha https://t.co/s5dcq2DEs4 pic.twitter.com/N5bKG3SUUi
— ANI (@ANI) April 27, 2023
நாங்கள் ஒரு குழுவை உருவாக்கினோம். வீரர்களுடன் நின்று அவர்களுக்கு உதவுவதில் நரேந்திர மோடி அரசு மிகத் தெளிவாக உள்ளது. எங்களைப் பொறுத்தவரை, விளையாட்டு மற்றும் வீரர்களுக்கே முன்னுரிமை. அவர்களுடன் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்" என்றார்.




















