ஜவுளித்துறைக்கு ரூ.10ஆயிரம் கோடி.. 7 லட்சம் வேலைவாய்ப்பு.. மத்திய அரசின் திட்டம் என்ன? விவரம்!
தமிழகம், குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தத் திட்டத்தினால் மாபெரும் தாக்கம் ஏற்படும்
‘தற்சார்பு இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஜவுளிகள், மனிதனால் உற்பத்தி செய்யப்பட்ட நூல், துணிகள் மற்றும் ஜவுளி தொழில்நுட்பம் சார்ந்த 10 பிரிவுகள்/ பொருட்களுக்கு ரூ. 10,683 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகையை (Production incentive Scheme) வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
மாநில மற்றும் மத்திய வரிகள் மற்றும் தீர்வைகள் தள்ளுபடி திட்டம், ஏற்றுமதிப் பொருட்கள் மீதான கட்டணங்கள் (RoSCTL) மற்றும் வரிகள் குறைப்பு திட்டம் (RoDTEP) மற்றும் இதர அரசு நடவடிக்கைகளுடன் (போட்டி தன்மையுடன் கூடிய விலையில் மூலப் பொருட்களை வழங்குதல், திறன் மேம்பாடு உள்ளிட்டவை) ஜவுளித்துறைக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கப்படுவதன் வாயிலாக ஜவுளி உற்பத்தியில் புதிய வளர்ச்சி ஏற்படும்.
Govt led by PM @NarendraModi ji has approved Production Linked Incentive Scheme for Textiles 🧵
— Piyush Goyal (@PiyushGoyal) September 8, 2021
Leveraging Economies of Scale, #PLI4Textiles scheme will help Indian companies emerge as Global Champions & create employment of over 7.5 lakh people, while empowering rural women. pic.twitter.com/96DB0GoCIb
ரூ. 1.97 லட்சம் கோடி மதிப்பில் 13 துறைகளுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் அளிக்கப்படும் என்ற 2021-22 மத்திய நிதிநிலை அறிக்கை அறிவிப்பின் ஒரு பகுதியாக தற்போது ஜவுளித்துறைக்கு இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 13 துறைகளுக்கு இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதன் வாயிலாக இந்தியாவின் குறைந்தபட்ச உற்பத்தி அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ. 37.5 லட்சம் கோடியாகவும், இதே காலகட்டத்தில் குறைந்தபட்ச வேலைவாய்ப்பு சுமார் 1 கோடியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜவுளித்துறைக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் மனிதனால் உற்பத்தி செய்யப்பட்ட நூல், துணிவகைகளின் உற்பத்தியும், ஜவுளி தொழில்நுட்பம் சார்ந்த துறைகளும் ஊக்குவிக்கப்படும் என்று மத்திய அமைச்சரவை தெரிவித்தது.
இந்தப் பிரிவுகளில் புதிதாக முதலீடுகள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பருத்தி மற்றும் பிற இயற்கை நார் அடிப்படையிலான ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத்திற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளுக்கு இணங்க வளர்ந்துவரும் மனிதனால் உற்பத்தி செய்யப்பட்ட நூல் (Man Made Fibre Segment) பிரிவுக்கு இது ஒரு பெரிய உந்துசக்தியை அளிக்கும். உலகளாவிய ஜவுளி வர்த்தகத்தில் இந்தியா அதன் வரலாற்று மேலாதிக்க நிலையை மீண்டும் பெற இது உதவிகரமாக இருக்கும்.
உள்கட்டமைப்பு, தண்ணீர், சுகாதாரம் மற்றும் துப்புரவு, பாதுகாப்பு, ராணுவம், வாகனங்கள், விமானம் உள்ளிட்ட பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் சார்ந்த ஜவுளி பிரிவு என்ற புதிய ஜவுளி, பொருளாதாரத்தின் இது போன்ற துறைகளில் முறையான பயன்பாட்டை மேம்படுத்தும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக தேசிய தொழில்நுட்பம் சார்ந்த ஜவுளி இயக்கத்தை அரசு கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் பிரிவில் கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் உதவிகரமாக இருக்கும்.
வெவ்வேறு ஊக்குவிப்பு கட்டமைப்புடன் இரண்டு விதமான முதலீடுகளுக்கு வாய்ப்புள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள பிரிவுகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஜவுளி பொருட்களின் உற்பத்திக்காக ஆலை, உபகரணம், கருவி உள்ளிட்ட பணிகளுக்கு குறைந்தபட்சம் ரூ. 300 கோடி முதலீடு செய்ய விரும்பும் எந்த நபரும் (நிறுவனம் அல்லது அமைப்பும் இதில் அடங்கும்) திட்டத்தின் முதல் பகுதியில் பங்கேற்பதற்குத் தகுதி பெறுவார்.
இரண்டாவது பகுதியில் குறைந்தபட்சம் ரூ. 100 கோடி முதலீடு செய்ய விருப்பமுள்ளவர்கள் இந்தப் பகுதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவார்கள். மேலும் ஆர்வமுள்ள மாவட்டங்கள் (Aspirational Districts) , 3 மற்றும் 4-ஆம் நிலை நகரங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன்மூலம் பின்தங்கிய பகுதிகளுக்கும் தொழில்துறை சென்றடையும். தமிழகம், குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தத் திட்டத்தினால் மாபெரும் தாக்கம் ஏற்படும்.
ஐந்து ஆண்டுகளில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் ஜவுளித் துறையில் புதிதாக ரூ. 19,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகளும், ஒட்டுமொத்த உற்பத்தி சுமார் ரூ. 3 லட்சம் கோடியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தத் துறையில் கூடுதலாக 7.5 லட்சம் வேலைவாய்ப்புகளும், இதனுடன் சம்மந்தப்பட்ட பணிகளில் லட்சக்கணக்கான வாய்ப்புகளும் உருவாகும். ஜவுளித் துறையில் பெரும்பாலும் பெண்கள் ஈடுபடுவதால் இந்தத் திட்டம் பெண்களுக்கு அதிகாரமளித்து, பொருளாதாரத்தில் அவர்களது பங்களிப்பையும் அதிகரிக்கும் என மத்திய அமைச்சரவை மேலும் தெரிவித்தது.