Priyanka Gandhi : "அப்பாவ துண்டு துண்டா, வீட்டுக்கு கொண்டு வந்தேன்" பிரியங்கா காந்தி உருக்கம்!
Priyanka Gandhi Campaign : குஜராத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா, மறைந்த தன்னுடைய தந்தை ராஜீவ் காந்தி குறித்து உருக்கமாக பேசினார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி, முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து, இரண்டாவது கட்டமாக நேற்று 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி உருக்கம்:
தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில், குஜராத்தில் வரும் மே மாதம் 7ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத், பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று பிரச்சாரம் செய்தார். வல்சாட் தரம்பூர் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மறைந்த தன்னுடைய தந்தை ராஜீவ் காந்தி குறித்து உருக்கமாக பேசினார்.
"எனது குடும்பத்தில் இருந்து மட்டுமல்ல, பல பிரதமர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆம், இந்திரா காந்தி அவர்களில் ஒருவர். அவர் இந்த நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்தார். ராஜீவ் காந்தியும் பிரதமராக இருந்தார். இறந்த பிறகு, அவரின் உடலை துண்டு துண்டாக வீட்டிற்கு கொண்டு வந்தேன். அவரும் தனது உயிரை நாட்டிற்காக தியாகம் செய்தார்" என பிரியங்கா காந்தி பேசினார்.
"மக்களை வலுவிழக்கச் செய்ய நினைக்கிறது"
தொடர்ந்து பேசிய அவர், "மன்மோகன் சிங் இந்த நாட்டில் புரட்சியைக் கொண்டு வந்தார். காங்கிரஸ் கட்சியைத் தாண்டிப் பார்த்தால், குறைந்தபட்சம் நாகரீகமான மனிதராக அடல் பிஹாரி வாஜ்பாய் இருந்தார். உங்களிடம் இப்படி பொய் சொல்லும் நாட்டின் முதல் பிரதமர் இவர்தான் (மோடி) என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
மக்கள் முன்னிலையில் பேசுகிறேன், உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று கூட அவர் நினைப்பதில்லை. இப்போது விழிப்புடன் இருக்குமாறு மக்களை எச்சரிக்கிறார். காங்கிரஸார் எக்ஸ்ரே இயந்திரத்துடன் உள்ளே நுழைவார்கள், உங்கள் ஆபரணங்கள் மற்றும் தாலியை பறித்து வேறு ஒருவரிடம் கொடுத்துவிடுவார்கள் என பிரதமர் கூறுகிறார்.
இது உண்மையா? இது சாத்தியமா? நமது நீதி (தேர்தல்) அறிக்கையில் அவருக்கு என்ன பிரச்சனை? அவரது நம்பிக்கை குலைந்ததா? தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்களை வெல்ல பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஏனெனில், அது அரசியலமைப்பைத் திருத்த விரும்புகிறது. ஆளும் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதை எல்லாம் மறுக்கிறது. ஆனால், ஆட்சி வந்த பின்பு, தனது திட்டத்தை செயல்படுத்தும். இது அவர்களின் தந்திரம். அவர்களின் திட்டம். ஜனநாயகத்தையும் மக்களையும் வலுவிழக்கச் செய்து அவர்களின் உரிமைகளைப் பறிக்க அரசியல் சட்டத்தை மாற்ற நினைக்கிறார்கள்" என்றார்.