ரத்த வெள்ளத்தில் சைஃப் அலிகான்.. ஸ்மார்ட்டாக யோசித்த மகன்.. மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றது ஏன்?
Saif Ali khan: மும்பையில் உள்ள வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சைஃப் அலிகானை அவரது மூத்த மகன் இப்ராஹிம், லீலாவதி மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார்.

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டில் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மும்பையில் உள்ள வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சைஃப் அலிகானை அவரது மூத்த மகன் இப்ராஹிம், லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். வீட்டில் பல கார்கள் இருந்தபோதிலும், சைஃப் அலிகானை அவரது மகன் ஆட்டோவில் அழைத்து சென்றிருக்கிறார்.
பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகர் சைஃப் அலிகான். இந்தி திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகரான இவர், பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரின் கணவர் ஆவார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான தேவாரா படத்தில் வில்லனாக நடித்திருப்பார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த சைஃப் அலிகான்:
இவர் மும்பையில் உள்ள பாந்த்ராவில் வசித்து வருகிறார். நேற்று இரவு, இவரது வீட்டின் உள்ளே புகுந்த கொள்ளையர் ஒருவர், இவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால், சைஃப் அலிகானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. சைஃப் அலிகானுக்கு ஆறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. கத்திக்குத்தால் ரத்த வெள்ளத்தில் கிடந்த சைஃப் அலிகானை அவரது மூத்த மகன் இப்ராஹிம்தான் முதலில் பார்த்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த இப்ராஹிம், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முற்பட்டுள்ளார். ஆனால், வீட்டில் கார்கள் தயார் நிலையில் இல்லாத காரணத்தால் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என எண்ணி, மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து சென்றிருக்கிறார்.
மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றது ஏன்?
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், சைஃப் அலிகானின் மனைவி கரீனா கபூர், ஆட்டோ ரிக்ஷாவின் அருகில் நின்று வீட்டு ஊழியர்களிடம் பேசுவதைக் காணலாம்.
கொள்ளைக்காரர் உடனான மோதலின் போது, சைஃப் அலிகானின் முதுகுத்தண்டிற்கு அருகில், ஆறு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்த நபர், கொள்ளை அடிக்கவே வீட்டில் நுழைந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

