PM Modi: ”ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி".... உருகிய பிரதமர் மோடி!
இமாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று தீபாவளி கொண்டாடினார்.
PM Modi: இமாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று தீபாவளி கொண்டாடினார்.
ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி:
ஆண்டுதோறும் ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. அந்த வகையில், இந்த ஆண்டு இமாச்சல பிரதேசத்தின் லெப்சா கிராமத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இந்தோ-திபெத் படையினருடன் இணைந்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். பின்னர், ராணவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில், "நமது ராணுவ வீரர்களின் துணிச்சல் அசாத்தியமானது. மிகக் கடினமான சூழலில், குடும்பத்தினரை விட்டு விலகி மிகப்பெரிய தியாகங்களை செய்து வருகின்றனர்.
எல்லையில் ராணுவ வீரர்கள், இமயமலையை போல் உறுதியாக நிற்பதால், நமது நாடு பாதுகாப்பாக உள்ளது. உலகம் தற்போது சந்திக்கும் பிரச்னைகளுக்கு மத்தியில் இந்தியா மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பாக இருப்பது முக்கியம்" என்றார்.
"ராமர் இருக்கிறாரோ அங்கு தான் அயோத்தி”
தொடர்ந்து பேசிய அவர், ”நாட்டில் அமைதியான சூழ்நிலையை நாங்கள் உருவாக்குகிறோம். இதில் உங்களுக்கு (ராணவ வீரர்கள்) பெரிய பங்கு உள்ளது. நாட்டை கட்டியெழுப்புவதில் ராணுவ வீரர்கள் தொடர்ந்து பங்களிப்பை அளித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நான் நமது பாதுகாப்பு படையினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறேன்.
கடந்த 30 முதல் 35 ஆண்டுகளாக நீங்கள் (ராணுவ வீரர்கள்) இல்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடியது கிடையாது. நான் பிரதமராகவோ, முதலமைச்சராகவோ இல்லாதபோது, ஏதாவது ஒரு எல்லை பகுதிக்கு சென்று ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடுவேன். இங்கிருந்து மக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வது சிறப்பானது. எங்கு ராமர் இருக்கிறாரோ அங்கு தான் அயோத்தி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், என்னை பொருத்தவரை எங்கு பாதுகாப்பு படையினர் உள்ளார்களோ அங்குதான் பண்டிகை” என்றார் பிரதமர் மோடி.
”ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு"
மேலும், "நமது ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 500க்கும் மேற்பட்ட பெண் ராணுவ அலுவலர்களின் பணி நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளது. ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்களை இயக்குபவர்களாகவும் பெண் ராணுவ அதிகாரிகள் திகழ்கிறார்கள். பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்போது உலகளவில் வளர்ந்து வருகிறது. நாட்டின் பாதுகாப்புத் தேவைகள் மட்டுமல்ல, நட்பு நாடுகளின் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி எட்டு மடங்கு உயர்ந்துள்ளதாகவும், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி தற்போது ரூ.1 லட்சம் கோடியாக உள்ளது” என்றார் பிரதமர் மோடி.
முன்னதாக, 2014ஆம் ஆண்டு சியாச்சின், 2015ஆம் ஆண்டு அமிர்தசரஸ், 2016ஆம் ஆண்டு லாஹவுல் - ஸ்பிடி, 2017ல் குரேஸ், 2018ல சாமோலி, 2019ல் ரஜோரி, 2020ல் ஜெய்சால்மர், 2021ல் நௌஷேரா, 2022ல் கார்கில் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.