PM Modi: தேசிய விண்வெளி தினம்.. அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி.. எந்த தேதியில் கொண்டாடப்படும்? முழு விவரம்..
ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பின்பு புவியின் சுற்றுவட்டப் பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 20 நாட்கள் பயணம் மேற்கொண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான்- 3 விண்கலம் நுழைந்தது.
சுமார் ஒன்றரை மாதங்கள் பயணம் மேற்கொண்டு, ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கியது. நிலவின் தென் துருவத்தில் கால் தடம் பதித்த ஒரே நாடு என்ற சாதனையை இந்தியா செய்துள்ளது. இந்த வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் கிடைத்த வெற்றி. நிலவுக்கு மனிதனை அனுப்புவதுதான் அடுத்தகட்டத் திட்டம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆனால் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும்போது பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டிற்காக தென் ஆப்பிரிக்கா சென்றிருந்தார். அதனால் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் திரையிரங்கியதற்காக இஸ்ரோ தலைவர் சோம்நாத் உடன் தொலைப்பேசி வாயிலாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்நிலையில் இந்தியா திரும்பிய அவர் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க பெங்களூருக்கு வருகை தந்துள்ளார்.
அப்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “ சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும்போது நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தாலும் என் மனம் இங்கே தான் இருந்தது. இந்த வெற்றியால் அலாதி மகிழ்ச்சி அடைந்தேன். இங்கு இருக்கக்கூடிய ஒவ்வொரு விஞ்ஞானிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கிய பகுதி சிவசக்தி என அழைக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
#WATCH | "On 23rd August, India hoisted flag on the Moon. From now onwards, that day will be known as National Space Day in India", says PM Modi pic.twitter.com/K16gbmUT2T
— ANI (@ANI) August 26, 2023
மேலும், “ஆகஸ்ட் 23-ஆம் தேதி இந்தியா நிலவின் தென் துருவத்தில் கால் தடம் பதித்தது. இனி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தேதி தேசிய விண்வெளி தினம் (national space day) அனுசரிக்கப்படும். சந்திராயன்-2 கால்தடங்களை பதித்த சந்திர மேற்பரப்பில் உள்ள இடம் 'திரங்கா' என்று அழைக்கப்படும். இந்தியா எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் இது ஒரு உந்து சக்தியாக இருக்கும். எந்த தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை அது நமக்கு நினைவூட்டும். சந்திரயான் 3 பணியில் பெண் விஞ்ஞானிகள் முக்கியப் பங்காற்றியுள்ளனர். இந்த 'சிவசக்தி' புள்ளி, வரும் தலைமுறையினர் மக்கள் நலனுக்காக அறிவியலைப் பயன்படுத்த ஊக்குவிக்கும். மக்கள் நலமே எங்களின் தலையாய கடமை. இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளித் துறை 8 பில்லியன் டாலரிலிருந்து 16 பில்லியன் டாலராக மாறும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்” என குறிப்பிட்டு பேசினார்.