PM Modi Visit: 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான 10 திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி இன்று சத்தீஸ்கர் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூருக்குச் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் சுமார் 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான 10 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் சத்தீஸ்கருக்கு செல்லும் முதல் பயணம் இதுவே ஆகும். இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். சத்தீஸ்கரில் தேர்தலுக்கு தயாராகி வரும் கட்சி தொண்டர்களுக்கு மோடியின் வருகை உற்சாகத்தை அளிக்கும் என்று சத்தீஸ்கரில் உள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர். 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அக்கட்சி, 2018ல் சத்தீஸ்கரில் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதம மந்திரியின் நிகழ்வு அங்குள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் காலை 10.45 மணிக்கு தொடங்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை 30-ல், 33-கிமீ நீளமுள்ள ராய்ப்பூர்-கோடெபோட் பகுதியின் நான்கு வழிப்பாதையையும், 53-கிமீ நீளமுள்ள பிலாஸ்பூர்-பத்ரபாலி பாதையான NH-130ஐயும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார். ஆறு வழி ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் வழித்தடத்தின் NH-130ன் ஒரு பகுதியாக மூன்று பிரிவுகள் (ஜாங்கி- சர்கி (43 கிமீ), சர்கி - பசன்வாஹி (57 கிமீ) மற்றும் பசன்வாஹி-மரங்புரி (25 கிமீ) ஆகிய மூன்று பிரிவுகளின் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
ரூ 750 கோடி செலவில் கட்டப்பட்ட 103 கிமீ நீளமுள்ள ராய்ப்பூர்-காரியார் சாலை இரயில் பாதையை இரட்டிப்பாக்குதல், கியோட்டி-அன்டகரை இணைக்கும் 17 கிமீ நீளம் கொண்ட புதிய ரயில் பாதை மற்றும் ஒரு பாட்டிலிங் ஆகியவற்றையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். கோர்பாவில் ஆண்டுக்கு 60,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் ஆலை 130 கோடி ரூபாய்க்கு கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சத்தீஸ்கரின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள். இன்று சத்தீஸ்கர் மாநிலம் ரூ.7,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பரிசாக பெறுகிறது. இந்த பரிசு, உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் சத்தீஸ்கர் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கானது. முன்பு மக்கள் சமூக அநீதிக்கு ஆளான பகுதிகளுக்கு மத்திய அரசு நவீன உள்கட்டமைப்பைக் கொண்டு வருகிறது” என தெரிவித்தார்.
மேலும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 75 லட்சம் அட்டைகள் வழங்குவதையும் பிரதமர் தொடங்கி வைத்தார். மேலும் அந்தகர் (காங்கர் மாவட்டம்) முதல் ராய்ப்பூருக்கு புதிய ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அதே இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். பொதுக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறப்புப் பாதுகாப்புக் (SPG) குழுவைத் தவிர, மாநில காவல்துறையின் பணியாளர்களை உள்ளடக்கிய பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.