PM Modi Speech : "பாரத மாதா பற்றி பேசியது மன்னிக்கமுடியாத குற்றம்.. மணிப்பூரில் அமைதி திரும்பும்”: பிரதமர் மோடி பேச்சு
மணிப்பூருடன் நாடு துணை நிற்கிறது என்றும் விரைவில் அங்கு அமைதி திரும்பும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் அனைத்து விதமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் இன்று கலந்து கொண்டு பதில் அளித்த பிரதமர் மோடி, "அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. எனவே, நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு எனது நன்றியை தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன்" என்றார்.
"கடவுள் அளித்த ஆசீர்வாதம்தான் நம்பிக்கையில்லா தீர்மானம்"
தொடர்ந்து பேசிய அவர், "மக்கள் ஆசியுடன், முந்தைய சாதனைகளை எல்லாம் முறியடித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியும், பாஜகவும் மாபெரும் வெற்றியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று நீங்கள் (எதிர்க்கட்சி) முடிவு செய்திருப்பதை பார்க்கிறேன்.
கடவுள் மிகவும் அன்பானவராக இருக்கிறார். சிலர் மூலம் பேசுகிறார். எதிர்க்கட்சிகள், இந்த தீர்மானத்தை கொண்டு வந்தது கடவுள் எனக்கு அளித்த ஆசீர்வாதம் என நினைக்கிறேன். 2018 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் எங்களுக்கான பரீட்சை அல்ல. அவர்களுக்கான நம்பிக்கையில்லா தீர்மானம். அதன் விளைவாக அவர்கள் தேர்தலில் தோற்றுப் போனார்கள் என்றும் கூறியிருந்தேன்.
நமது கவனம் நாட்டின் வளர்ச்சியில் இருக்க வேண்டும். இது காலத்தின் தேவை. கனவுகளை நனவாக்கும் ஆற்றல் நம் இளைஞர்களுக்கு உண்டு. ஊழலற்ற ஆட்சியை, லட்சியங்களையும், வாய்ப்புகளையும் நாட்டின் இளைஞர்களுக்கு வழங்கியுள்ளோம்.
"நோ பாலாக போடும் எதிர்க்கட்சிகள், சதமாக பறக்கவிடும் ஆளுங்கட்சி"
நீங்கள் (எதிர்க்கட்சியினர்) ஏழைகளின் பசியைப் பற்றிக் கவலைப்படவில்லை. நீங்கள் அதிகாரத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறீர்கள். நீங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படவில்லை. உங்கள் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறீர்கள். எதிர்க்கட்சியினர் பீல்டிங் செட் செய்கின்றனர். ஆனால், இங்கிருந்து பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடிக்கப்பட்டன. நாங்கள் சதம் அடித்துக்கொண்டே இருக்கிறோம். அவர்கள் நோ பால்களாக வீசுகின்றனர். நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர ஐந்து வருடங்கள் கால அவகாசம் வழங்கினேன். நீங்கள் ஏன் உங்களை தயார் செய்து கொள்ளவில்லை
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தனிப்பெரும் எதிர்க்கட்சியின் தலைவரை பேசவிடவில்லை. 1999ஆம் ஆண்டு, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சரத் பவார் தலைமை தாங்கினார். 2003இல் சோனியா காந்தி தலைமை தாங்கினார். ஆனால், இந்த முறை ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு என்ன நடந்தது என்று பாருங்கள்? அவரின் கட்சியினரே அவரை பேச விடவில்லை.
என்ன நிர்பந்தம் என தெரியவில்லை. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏன் ஓரங்கட்டப்பட்டார்? கொல்கத்தாவில் (மம்தா) இருந்து அழைப்பு வந்திருக்கலாம். ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு அனுதாபம் தெரிவிக்கிறோம். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, 2014ஆம் ஆண்டு நாட்டு மக்களின் ஆதரவோடு முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தோம். 2019ஆம் ஆண்டு, எங்களுக்கே மக்கள் மீண்டும் வாய்ப்பளித்தனர். 2014ஆம் ஆண்டை காட்டிலும் அதிக பலத்துடன் ஆட்சி அமைத்தோம்.
"நாட்டுக்கே எதிர்க்கட்சிகள் திருஷ்டியாக மாறியுள்ளனர்"
மத்திய அரசின் நேரடி பண பரிமாற்ற திட்டம், உலகின் அற்புதம் என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. ஜல் ஜீவன் திட்டம் மூலம் இந்தியா லட்சங்களை மிச்சப்படுத்துகிறது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஸ்வச் பாரத் திட்டத்தை ஆய்வு செய்து மூன்று லட்சத்தை இந்தியா மிச்சப்படுத்தியதாக உலக சுகாதார அமைப்பு கூறியது.
அவர்களின் ரத்தத்திலும் எலும்புகளிலும் சந்தேகம் பொதிந்துள்ளது. நல்ல விஷயம் நடந்தால் நாங்கள் திருஷ்டி கழிக்கிறோம். ஆனால், எதிர்கட்சியினர் கருப்பு துணி அணிகிறார்கள். நாட்டுக்கே எதிர்க்கட்சிகள் திருஷ்டியாக மாறியுள்ளனர். வங்கி அமைப்பு முடிவுக்கு வரும் என எதிக்கட்சிகள் கணிக்கின்றன. ஆனால், பொதுத்துறை வங்கிகள் இரட்டிப்பு நிகர லாபத்தை கொண்டு வருகின்றன.
பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (எச்ஏஎல்) முடிந்துவிட்டது என்றார்கள். அவர்கள் எச்ஏஎல் ஊழியர்களின் வீடியோவை எடுத்து, அதன் மதிப்பு குறைவதாக பயமுறுத்தினார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் எச்ஏஎலின் வீழ்ச்சியைத்தான். எல்.ஐ.சி.யும் முடிந்து விட்டது, ஏழைகளின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என்றார்கள். ஆனால், இன்று எல்ஐசி வலுப்பெற்று வருகிறது.
'உங்கள் கல்லறையை மோடி தோண்டிகிறார்' என்பதே எதிர்க்கட்சிகளுக்கு பிடித்த கோஷம். ஆனால், அவர்கள் என்னை நோக்கி வசைபாடுவது, அவமதிக்கும் வார்த்தைகளை சொல்வது டானிக் போன்று உள்ளது. அவர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள்? எதிர்க்கட்சிகளுக்கு ஒரு ரகசிய வரம் கிடைத்துள்ளது என்று நான் நம்புகிறேன். அவர்கள் யாரை எதிர்த்துப் பேசிகிறார்களோ அவர்கள் வளர்ந்து விடுகிறார்கள். அதற்கு நானே எடுத்துக்காட்டு.
"பாகிஸ்தானை நம்பும் எதிர்க்கட்சிகள்"
வங்கித் துறைகளுக்கு எதிராக அவர்கள் பேசினார்கள். வெளியில் இருந்து நிபுணர்களை அழைத்து வந்து பேசுகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். ஆனால், அரசு வங்கிகளின் லாபம் இரட்டிப்பாகியுள்ளது. 2028ஆம் ஆண்டு, நீங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போது, அதற்குள் நாடு முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிடும் என்று நாட்டு மக்கள் நம்புகின்றனர்.
அவர்கள் (எதிர்க்கட்சி) எந்த அமைப்பை எதிர்த்துப் பேசினாலும். அவர்களின் அதிர்ஷ்டம் மாறிவிடும். நாட்டின் திறன்கள் மீது அவர்களுக்கு (எதிர்க்கட்சிகள்) நம்பிக்கை இல்லை. நமது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்று நான் கூறினேன்.
எதிர்க்கட்சிகள், பொறுப்பான கேள்விகளைக் கேட்டிருக்க வேண்டும். ஆனால், தானாகவே மூன்றாவது பெரிய நாடாக மாறும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. இது அவர்களுக்கு எந்த திட்டமிடலும் இல்லை, கொள்கையும் இல்லை என்பதை காட்டுகிறது.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வரலாறு, அவர்களுக்கு இந்தியா மீதும் அதன் திறன்கள் மீதும் நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. நமது எல்லையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளை அனுப்பியது. காஷ்மீர் தீவிரவாதத்தின் தீயில் எரிந்து கொண்டிருந்தது. ஆனால், காங்கிரஸ் ஹுரியத், பிரிவினைவாதிகள் மற்றும் பாகிஸ்தான் கொடியுடன் திரிபவர்களை நம்பியது. நாங்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினோம். ஆனால் அவர்கள் எங்களை நம்பவில்லை. அவர்கள் பாகிஸ்தானை நம்பினார்கள்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்தியா கூட்டணி அல்ல; ஈகோ கூட்டணி. ஒரு ஏழைத்தாயின் மகன் பிரதமராக இருப்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்றார்.
1:30 மணி உரைக்கு பிறகு, மணிப்பூர் குறித்து பதில் அளித்த அவர், மணிப்பூருடன் நாடு துணை நிற்கிறது என்றும் விரைவில் அங்கு அமைதி திரும்பும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.