(Source: ECI/ABP News/ABP Majha)
தனித்தனி பரிசு.. ஒவ்வொன்னும் தனி ரகம்.. உலக நாடுகளின் தலைவர்களை அசர வைத்த பிரதமர் மோடி!
ஜி7 நாடுகளின் தலைவர்களுக்கும் பல்வேறு விதமான இந்திய பொருட்களை வழங்கி பிரதமர் மோடி அவர்களை சிறப்பித்துள்ளார்.
ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடி உலக நாடுகளின் தலைவர்களுக்கு அளித்துள்ள பரிசுப் பொருட்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பொதுவாக பிரதமர் மோடி எந்த வெளிநாட்டு பயணம் மேற்கொண்டாலும் அந்த நாட்டின் தலைவர்களை சந்திக்கும்போது இந்தியாவின் கலாச்சாரம் பண்பாடு சார்ந்த பரிசுகளை அவர்களுக்கு வழங்கி, இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்வது வழக்கம். அதன்படி ஜி7 நாடுகளின் தலைவர்களுக்கும் பல்வேறு விதமான இந்திய பொருட்களை வழங்கி பிரதமர் மோடி அவர்களை சிறப்பித்துள்ளார்.
அதன்படி அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தயாரிக்கப்படும் புவிசார் குறியீடு பெற்ற குலாபி மீனாகாரி என்ற புகழ் மிக்க கலை நுட்பத்துடன் கூடிய பொருளை மோடி பரிசாக வழங்கியுள்ளார். இதில் மீனாகாரி கண்ணாடியை தூளாக்கி, மாதுளை விதை பசை மூலம் ஒட்டப்பட்டு, குலாபி என்னும் இளஞ்சிவப்பு நிறத்தில் மிகுந்த நுண் வேலைபாடுகளுடன் தயாரிக்கப்படுவதுதாகும். இதுமட்டுமின்றி பிடனுக்கும் அவரது மனைவிக்கும் அலங்கார அணிகலன்களையும் அவர் பரிசாக வழங்கியுள்ளார்.
அதேபோல் ஜி7 மாநாட்டிற்கு தன்னை சிறப்பு அழைப்பாளராக அழைத்த ஜெர்மனி பிரதமருக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் மொராபாத்தில் தயாரிக்கப்படும் உலோகத்திலான நுண்ணிய கலையம்ச வேலைபாடுகள் கொண்ட குடுவையை பிரதமர் மோடி பரிசளித்துள்ளார்.
அதேசமயம் ஜப்பான் பிரதமருக்கு நிஜாமாபாத்தில் மட்டுமே பிரத்யேகமாக உருவாக்கப்படும் கருப்பு நிற மண்பாண்டங்களை வழங்கியுள்ள நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கலையம்சத்துடன் உருவாக்கப்பட்ட பிளாட்டின நிறத்திலான தேநீர் கோப்பைகளையும், பிரான்ஸ் அதிபர் எலிசபெத் போர்ஃனேவுக்கு லோக்னோவில் இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் பிரசித்தி பெற்ற வாசனை திரவியத்தையும், காதி பட்டால் தயாரிக்கப்பட்ட பிரான்ஸ் தேசியக் கொடி பொறிக்கப்பட்ட பெட்டியில் வைத்து பிரதமர் மோடி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து இந்தோனேஷியா பிரதமருக்கு ராமாயண கதையை உணர்த்தும் வகையிலான தர்பார் மண்டபத்தில் ராமர் இருப்பதுபோல் உருவாக்கப்பட்ட சிலையை அளித்து, இரு நாடுகளின் உறவு என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே, அதாவது ராமாயண காலத்திலிருந்தே தொடர்கிறது என்பதை நினைவூட்டியுள்ளார்
புகழ்பெற்ற காஷ்மீர்பட்டால் நெய்யப்பட்ட தரை விரிப்பை கனடா பிரதமருக்கும், சத்தீஸ்கரின் டோக்ரா கலை பொருட்களை அர்ஜெண்டினா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் தலைவர்களுக்கும் வழங்கி அவர்களை பிரதமர் மோடி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்