(Source: ECI/ABP News/ABP Majha)
‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் மிதாலி ராஜுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி..
‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறர். இன்று காலை பேசிய பிரதமர் மோடி, “மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் சாதனைகள் அனைவரையும் பிரம்மிக்க வைக்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து திறமையானவர்களை வெளியே கொண்டுவர வேண்டும்” என்று கூறினார்.
பிரதமரின் இந்தப் பேச்சுக்கு நன்றி தெரிவித்த மிதாலி ராஜ், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தான் படைத்த சாதனைகளுக்காக பிரதமரிடம் இருந்து கிடைத்த பாராட்டை மிகவும் கெளரவமாக கருதுகிறேன் என்று ட்வீட் செய்தார்.
மேலும், மாமல்லபுரத்தில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தளமாக விளங்குவதாகவும், மாமல்லபுரத்தில் முதலாம் மகேந்திர வர்மனால் கட்டப்பட்ட கோயில் அமைந்துள்ளதாகப் பேசிய பிரதமர், நாட்டிலேயே நகரப்பகுதிக்குள் அமைந்துள்ள ஒரே கலங்கரை விளக்கம் சென்னை கலங்கரை விளக்கம்தான் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், கோவையில் பேருந்து நடத்துநர் யோகநாதன் மாரிமுத்து பயணிகளுக்கு டிக்கெட்டுடன் மரக்கன்றுகளையும் கொடுப்பதாகவும், தன்னுடைய வருமானத்தில் பெரும்தொகையை இதற்காக அவர் செலவிடுவது பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார். நாம் அனைவரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.