(Source: ECI/ABP News/ABP Majha)
PM Modi Visit To Kerala: இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி கேரளா வருகை.. 2000 போலீசார் குவிப்பு..
இரண்டு நாள் பயணமாக இன்று கேரளாவிற்கு பிரதமர் மோடி வருகை தருகிறார்.
இரண்டு நாள் பயணமாக இன்று கேரளாவிற்கு பிரதமர் மோடி வருகை தருகிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளாவிற்கு இன்று வருகிறார். இதற்காக இன்று மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகிறார். விமான நிலையத்திலிருந்து சுமார் 1.8 கிமீ தொலைவுக்கு சாலை மார்கமாக பயணம் செய்ய உள்ளார். இந்த ரோட்ஷோவில் ஏராளமான தொண்டர்கள் பிரதமர் மோடியை காண ஆர்வத்துடன் வருகை தருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை மார்கமாக தனது பயணத்தை முடித்து பா.ஜ.க இளைஞர் பாசறை சார்பில் நடக்கும் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகிறார். மேலும் கிறிஸ்துவ மத தலைவர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை குறித்து பேச உள்ளார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கொச்சியில் இன்று இரவு ஓய்வெடுகிறார்.
நாளை காலை திருவனந்தபுரத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். திருவனந்தபுரத்தில் உள்ள செண்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். திருவனந்தபுரம் செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காசர்கோடு வரை வந்தே பாரத் ரயில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து செண்ட்ரல் ஸ்டேடியத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
இதற்கிடையில் பிரதமர் மோடி கேரளா பயணத்தில் பயங்கரவாத தாக்குதல் நடைபெறும் என மிரட்டல் கடிதம் பா.ஜ.க அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. அதேபோல் இந்த பயணத்தின் போது பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு விவரங்கள் அடங்கிய தகவலும் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நேற்றைய தினம் கேரளா காவல் துறையினர் சேவியர் என்ற நபரை கைது செய்துள்ளனர்.
முதலில் ஜானி என்ற பெயரில் கடிதம் அனுப்பப்பட்டது அதனை தொடர்ந்து ஜானி என்ற நபரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அந்த நபர் கடிதம் எழுதவில்லை என்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து சேவியர் என்பவர் ஜானி மீது இருக்கும் தனிப்பட்ட பகையால் கடிதம் அனுப்பியதாக தெரியவந்தது. பின் சேவியர் என்ற நபரை கைது செய்தனர். மேலும் பிரதமர் வருகையையொட்டி கொச்சி நகரில் 2,060 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆணையர் சேது ராமன் தெரிவித்தார். பிரதமரின் ரோட் ஷோவில் சுமார் 20,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.