Odisha Train Accident: ‘ஒடிஷா ரயில் விபத்தில் யாரேனும் தவறு இழைத்திருந்தால் கடும் நடவடிக்கை பாயும்’ - பிரதமர் மோடி உறுதி
ஒடிஷா ரயில் விபத்து சம்பவத்தில் யாரேனும் தவறு இழைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயில் ஒடிஷாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தது. இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அடுத்த சிறிது நேரத்தில் எதிர் தண்டவாளத்தில் வந்துக் கொண்டிருந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் தடம் புரண்ட பெட்டிகளில் சிக்கியவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு:
இந்நிலையில், விபத்து நடத்த இடத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பாலசோரில் ரயில் விபத்து நடத்த இடத்தில் சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார் பிரதமர் மோடி. அதனை தொடர்ந்து, கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்த பின்னர் பேட்டியளித்த பிரதமர் மோடி, “இந்த விபத்தில் பலர் உயிரிழந்தது மிகவும் வேதனைக்குரியது” என்றார். மேலும் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறியதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினரின் வேதனை தான் நன்றாக உணர்வதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் யாரேனும் தவறு இழைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனவும் அரசின் முழு பலத்தையும் பயன்படுத்தி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
முன்னதாக, இந்த விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவது, அவசர மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.