கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்..!
கர்நாடகம், கோவா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நியமித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், கர்நாடக மாநிலத்தின் ஆளுநராக தாவர்சந்த் கெலாட், ஹரியானா மாநிலத்தின் ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வடகிழக்கு மாநிலமான மிசோரத்தின் ஆளுநராக ஹரிபாபுவும், மத்திய பிரதேசத்தின் ஆளுநராக மங்குபாய் சகன்பாய் படேலும், ஹிமாச்சல பிரதேசத்தின் ஆளுநராக ராஜேந்திரன் விஸ்வநாத் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர கோவா மாநிலத்தின் ஆளுநராக ஸ்ரீதரன் பிள்ளையும், திரிபுரா மாநிலத்தின் ஆளுநராக சத்யதேவ் நாராயணன் ஆரியாவும், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக ரமேஷ் பயசும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் தற்போது வாஜிபாய் வாலா ஆளுநராக பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு முதல் மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் இவருக்கு தற்போது 83 வயதாகிறது. இந்த நிலையில், குடியரசுத் தலைவரின் புதிய உத்தரவின்படி கர்நாடக புதிய ஆளுநராக தாவர்சந்த் கெலாட் பொறுப்பேற்க உள்ளார்.
ஹரியானாவின் ஆளுநராக கடந்த 2018ம் ஆண்டு முதல் சத்யதேவ் நாரயணன் ஆர்யா பொறுப்பு வகித்து வருகிறார். ஹிமாச்சல பிரதேசத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த பண்டாரு தத்தாத்ரேயே ஹரியானாவின் புதிய ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
மிசோரம் மாநிலத்தின் ஆளுநராக பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை 2019ம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வருகிறார். மிசோரம் மாநிலத்தின் புதிய ஆளுநராக ஹரிபாபு நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தின் ஆளுநராக கடந்த 2020ம் ஆண்டு முதல் ஆனந்திபென் படேல் பொறுப்பு வகித்து வருகிறார். மத்திய பிரதேசத்தின் புதிய ஆளுநராக மங்குபாய் சகன்பாய் பட்டேல் பொறுப்பு ஏற்க உள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தின் ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா பொறுப்பு வகித்து வருகிறார். 74 வயதான அவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் அந்த மாநில ஆளுநராக பொறுப்பு வகித்து வருகிறார். ஹிமாச்சல பிரதேச ஆளுநராக ராஜேந்திரன் விஸ்வநாத் பொறுப்பு ஏற்க உள்ளார்.
கோவா மாநிலத்தின் ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி பொறுப்பு வகித்து வருகிறார். 79 வயதான அவர் கடந்த 2020 முதல் மாநில ஆளுநராக பொறுப்பு வகித்து வருகிறார். மிசோரம் மாநில ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை கோவா மாநிலத்தின் புதிய ஆளுநராக பொறுப்பு ஏற்க உள்ளார்.
திரிபுரா மாநிலத்தின் ஆளுநராக ரமேஷ் பயாஸ் பொறுப்பு வகித்து வருகிறார். 2019ம் ஆண்டு முதல் ஆளுநராக பொறுப்பு வகிக்கும் அவருக்கு தற்போது 73 வயதாகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் புதிய ஆளுநராக சத்யதேவ் நாராயணன் ஆர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக திரவுபதி முர்மு பொறுப்பு வகித்து வருகிறார். 63 வயதான அவர் கடந்த 2015ம் ஆண்டு முதல் அவர் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பு வகித்து வருகிறார். திரிபுரா மாநில ஆளுநர் ரமேஷ் பயாஸ் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரே நாளில் நாடு முழுவதும் எட்டு ஆளுநர்களை குடியரசுத்தலைவர் மாற்றி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதியதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்களுக்கு அந்தந்த மாநில முதல்வர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.