Prajwal Revanna: நீதிமன்றத்தில் எடுபடாத பிரஜ்வல் ரேவண்ணா வாதம்! 6 நாட்கள் போலீஸ் காவல்
Prajwal Revanna: பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கர்நாடக பாலியல் புகார் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் போலீஸ் காவலில் விசாரணை மேற்கொள்ள 6 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில், குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லையென பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. மேலும், தன்மீது திட்டமிட்டு புகார் பரப்பப்படுவதாகவும், புகார் அளித்த பெண்ணின் அடையாளங்கள், வீடியோவில் இல்லை எனவும் வாதம் வைக்கப்பட்டது.
கைதான பிரஜ்வல் ரேவண்ணா:
பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் பிரஜ்வல் ரேவண்ணா, அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், வரும் மே 31 ஆம் தேதி தாயகம் திரும்பி வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) முன் ஆஜராவேன் என்று அறிவித்தார். இந்நிலையில் நள்ளிரவில் நாடு திரும்பிய ரேவண்னாவை, விமான நிலையத்திலேயே காத்திருந்த சிறப்பு விசாரணைக் குழுவினர் கைது செய்தனர். தொடர்ந்து, விசாரணைக்காக அவர் சிறப்பு விசாரணைக் குழுவின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பாலியல் சர்ச்சை:
33 வயதான பிரஜ்வல் ரேவண்ணா, ஜேடி(எஸ்) கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவே கவுடாவின் பேரன் ஆவார். ஏராளமான பெண்களுக்கு அவர் பாலியல் தொல்லை அளித்ததாக, பல வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ்கள் கடந்த ஏப்ரல் மாதம் பொது இடங்களில் சிதறிக்கிடந்தன. இது மக்களவை தேர்தலில் பெரும் விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது. இதனால், அவசர அவசரமாக ரேவண்ணா கடந்த ஏப்ரல் 27ம் தேதி வெளிநாடு தப்பிச் சென்றார். 28ம் தேதி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பல முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தேவகவுடாவே எச்சரித்து இருந்தார். ரேவண்ணா எங்கிருக்கிறார் என்பது குறித்து இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸையும் வெளியிட்டது. இந்நிலையில் தான், ரேவண்ணா விசாரணைக் குழு முன்பு ஆஜராகியுள்ளார்.
ஜாமின் மறுப்பு:
ரேவண்ணாவின் இராஜதந்திர பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனிடையே இந்தியா திரும்புவதற்கு முன்னதாகவே, ரேவண்ணா சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பெங்களூரு கீழமை நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.
Suspended JD(S) MP Prajwal Revanna remanded to SIT custody till June 6 by Bengaluru Court
— Press Trust of India (@PTI_News) May 31, 2024
6 நாட்கள் போலீஸ் காவல்:
இந்நிலையில் , பிரஜ்வல் ரேவண்ணா இன்று கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லையென பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. மேலும், தன்மீது திட்டமிட்டு புகார் பரப்பப்படுவதாகவும், புகார் அளித்த பெண்ணின் அடையாளங்கள், வீடியோவில் இல்லை எனவும் வாதம் வைக்கப்பட்டது.
பின்னர், பிரஜ்வல் ரேவண்ணாவை காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள 14 நாட்கள் அனுமதி கேட்கப்பட்டது. இந்நிலையில், 6 நாட்கள் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.