Postal Service: ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகள் கட்; இந்திய தபால் துறை அதிரடி
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மீது வரிகளை போட்டு தாக்கிய நிலையில், அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய தபால் துறை அறிவித்துள்ளது.

இந்தியா மீது அமெரிக்கா 50 சதவித வரிகளை விதித்துள்ள நிலையில், சுங்க வரிகளில் தெளிவு இல்லாமல் இருப்பதாகக் கூறி, அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தபால் துறை அறிவித்துள்ளது. இது குறித்து அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.
“வரும் 25-ம் தேதி முதல் அமெரிக்காவிற்கு அஞ்சல் சேவை நிறுத்தி வைப்பு“
இந்திய தபால் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மாத இறுதியில் அமலுக்கு வரவிருக்கும் அமெரிக்க சுங்க விதிகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, ஆகஸ்ட் 25-ம் தேதி முதல், அமெரிக்காவிற்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 29 முதல், "அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருட்களும், அவற்றின் மதிப்பைப் பொருட்படுத்தாமல், அந்தந்த நாட்டிற்குரிய சர்வதேச அவசர பொருளாதார சக்தி சட்டம் (IEEPA) கட்டண கட்டமைப்பின்படி, சுங்க வரிகளுக்கு உட்பட்டதாக இருக்கும்" என்று ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஜூலை 30, 2025 அன்று வெளியிடப்பட்ட நிர்வாக உத்தரவு எண். 14324-ன் படி, 800 அமெரிக்க டாலர் வரையிலான மதிப்பு கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான வரியில்லா விலக்கு திரும்பப் பெறப்படுகிறது. இருப்பினும், கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் 100 அமெரிக்க டாலர் வரையிலான பரிசுப் பொருட்கள் வரியில்லாமல் இருக்கும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது 25 சதவீத வரியையும், கூடுதலாக 25 சதவீத அபராதத்தையும் விதித்ததைத் தொடர்ந்து, வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் இந்த மாற்றம் வந்துள்ளது.
அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட போக்குவரத்து விமான நிறுவனங்கள் அல்லது பிற "தகுதிவாய்ந்த தரப்பினர்" அஞ்சல் சரக்குகளில் வரிகளை வசூலித்து அனுப்ப வேண்டும் என்று நிர்வாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப தயார்நிலை இல்லாததால், அமெரிக்கா செல்லும் விமான நிறுவனங்கள் அஞ்சல் சரக்குகளை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளன.
வருத்தம் தெரிவித்துள்ள தபால் துறை
இந்நிலையில், "வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தபால் துறை ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதோடு, அமெரிக்காவிற்கு முழு சேவைகளையும் விரைவில் தொடங்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறது" என்று தபால் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து விரைவில் சேவைகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பை எதிர்க்கும் வகையில், இந்தியா இதுபோன்ற பல அதிரடிகளை அரங்கேற்றினால் தான், இதற்கு ஒரு விடிவு ஏற்படும். அதனால், எந்தெந்த வழிகளில் எதிர்ப்பை தெரிவிக்க முடியுமோ, அதை இந்தியா செய்ய வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.





















