PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு: பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஒன்றைரை வருடங்களுக்கு மேல் ஆன நிலையில், அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டம் நிறைவடைந்தது. இதில், பல கோரிக்கைகள் பிரதமரிடம் முன்வைக்கப்பட்டன.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, அங்குள்ள அனைத்து கட்சி அரசியல் கட்சிகளுடன் மத்திய அரசு இன்று முதல் கூட்டம் நடத்தியது.
டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முன்னாள் முதல்வா்கள் தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, அவருடைய மகன் ஒமா் அப்துல்லா, காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி, முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான டாரா சந்த், மாா்க்சிஸ்ட் கட்சி தலைவா் முகமது யூசுஃப் தாரிகாமி உள்ளிட்டோர் பங்குபெற்றனர். சுமார் மூன்று மணி நேரமாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பல கோரிக்கைகள் பிரதமர் நரேந்திர மோடியின் முன்வைக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்திற்கு பின் பேசிய மெகபூபா முப்தி, “கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு பிறகு ஜம்மு-காஷ்மீர் மக்கள் நிறைய சிரமங்களில் உள்ளனர். ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட முறையை மக்கள் ஏற்கவில்லை. மாதங்களோ, ஆண்டுகளோ ஆனாலும், 370ஆவது சட்டப்பிரிவை மீட்டெடுப்போம். இது எங்களின் அடையாளம்” என்று கூறினார்.
Prime Minister @narendramodi chairs an all-party meeting with the political leaders from J&K in national capital.
— All India Radio News (@airnewsalerts) June 24, 2021
This was the first such meeting after 5th August, 2019 when the Centre decided to abrogate Article 370 of Constitution that gave #JammuAndKashmir a special status. pic.twitter.com/yUFH94YVZO
இதனைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து, ஜனநாயகத்தை மீட்டெடுக்க சட்டப்பேரவைத் தேர்தல், காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு மறுவாழ்வு, அரசியல் காரணத்திற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் மற்றும் குடியேற்ற விதிகள் ஆகிய ஐந்து கோரிக்கைகள் பிரதமரிடம் முன்வைக்கப்பட்டதாக குலாம் நபி ஆசாத் கூறினார்.
மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்ததாகவும், அனைத்து தலைவர்களும் முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம் எனவும் கூறினார்.