ஆஸ்கர் புகழ் பொம்மன், பெல்லி தம்பதியை சந்தித்த பிரதமர் மோடி... நீலகிரியில் நெகிழ்ச்சி..!
ஆஸ்கர் விருது பெற்ற எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானை பராமரிப்பாளராக உள்ள பொம்மன், பெல்லி ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். முன்னதாக கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதிக்கு வருகை தந்தார்.
ஆஸ்கர் புகழ் பொம்மன், பெல்லி தம்பதியை சந்தித்த பிரதமர் மோடி:
மசினகுடி பகுதியில் இருந்து சாலை மார்க்கமாக காரில் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு ஆஸ்கர் விருது பெற்ற எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானை பராமரிப்பாளராக உள்ள பொம்மன், பெல்லி ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பின்னர் மசினகுடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கர்நாடக மாநிலத்திற்கு பிரதமர் மோடி திரும்பி சென்றார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. குறிப்பாக பிரதமர் பங்கேற்கும் யானைகள் முகாமை சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் யானைகள் முகாமில் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.
குறிப்பாக மசினகுடி சாலை வழியாக பிரதமர் சென்றதால், வெடிகுண்டு நிபுணர்கள் மசினகுடி பகுதியில் ஹெலிகாப்டர் தளத்திலிருந்து தெப்பக்காடு சாலை வரை மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். சாலை, கடைகள், சாலைக்கு அடியில் பதியப்பட்டுள்ள குழாய்கள் போன்ற இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
மசினகுடி பகுதியில் இருந்து பிரதமர் சாலை வழியாக சென்ற தெப்பக்காடு சாலை அடர் வனப்பகுதி என்பதால், சாலை முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி முழுவதும் காவல் துறையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மோடியின் தமிழ்நாடு பயணம்:
முன்னதாக, ஒரு நாள் பயணமாக நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி, சென்னை விமான நிலைய பன்னாட்டு முனைய திறப்பு விழா, சென்னை - கோவை வந்தே பாரத் தொடக்க விழா, ராமகிருஷ்ணா மடத்தின் 125ஆவது ஆண்டு விழா ஆகியவற்றில் கலந்து கொண்டார். பின்னர், பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
தமிழ்நாட்டில் 5,200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியின்போது அடிக்கல் நாட்டினார். தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில் சேவையை தொடங்கி வைத்த மோடி, 37 கி.மீ. தூர திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.
பின்னர், மதுரை - செட்டிக்குளம் உயர்மட்ட பாலம், நத்தம் - துவரங்குறிச்சி 4 வழிச்சாலையையும் மோடி திறந்து வைத்துள்ளார். திருமங்கலம் - வடுகப்பட்டி - தெற்குவெங்கநல்லூர் இடையே 4 வழிச்சாலை திட்டத்திற்கு மோடி அடிக்கல் நாட்டினார்.
பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளம், தகவல்ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல். முருகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டில் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெலங்கானா, கர்நாடக, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு மோடி பயணம் செய்து வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.