PM Modi: பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசா? பரிசுக்குழு துணைதலைவர் சொன்னது என்ன?
இந்திய பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டவர் என, நோபல் பரிசுக்குழுவின் துணைதலைவர் ஆஷ்லே டோஜே தெரிவித்துள்ளார் என தகவல் வெளியானது
இந்திய பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டவர் என, நோபல் பரிசுக்குழுவின் துணைதலைவர் ஆஷ்லே டோஜே தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், தற்போது பிரதமர் மோடி பற்றி நோபல் பரிசு பரிந்துரை குழுவின் துணைத் தலைவர் புகழ்ந்து பேசியதை வேறு விதமாக மாற்றி அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க அதிக வாய்ப்பிருப்பதுபோல அவர் பேசியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
”அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக பிரதமர் மோடி இருக்கிறார். இன்று உலகில் உள்ள அமைதியின் மிகவும் நம்பகமான முகமாக பிரதமர் மோடி திகழ்கிறார். தன்னை இந்திய பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகராகவும் ஆஷ்லே டோஜே குறிப்பிட்டுள்ளார். போரிடும் நாடுகளிடையே போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டக்கூடிய நம்பிக்கைக்குரிய தலைவர் பிரதமர் மோடி. அவரது கொள்கைகளால் இந்தியா பணக்கார நாடாக மாறி வருகிறது” என ஆஷ்லே பேசியதாக தகவல் வெளியானது
பிரதமர் மோடிக்கு புகழாரம்:
இந்தியா உலக அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமைதியின் தூதராகக் கருதப்படுகிறார். ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் தலைவர்களிடம் போர் முக்கியமல்ல, எதிர்காலம் அமைதியாக இருக்க வேண்டும் என மோடி வலியுறுத்துவதை சுட்டிக்காட்டியுள்ளார். அதோடு, உலகில் அமைதியை நிலைநாட்ட இந்தியா எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டிய ஆஷ்லே டோஜே, உலக நாடுகள் இந்தியாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். மிகவும் தகுதி வாய்ந்த தலைவரான பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றால் அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும் எனவும் பேசியுள்ளார். ஆஷ்லே டோஜேவின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது
தொடரும் கோரிக்கைகள்:
கொரோனா பரவல் காலத்தில் நாடு முழுவதும் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்திய பிரதமர் மோடிக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவது குறித்து நோபல் கமிட்டி ஏன் தீவிரமாகப் பரிசீலிக்கக் கூடாது என மும்பை பங்குச்சந்தையின் தலைவர் ஆஷிஸ் சவுகான் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தார். அதோடு, உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரின் தொடக்க காலத்தில், இருநாட்டு தலைவர்களிடமும் பேசி அங்கு போரை தற்காலிகமாக நிறுத்தி உக்ரைனில் சிக்கி இருந்த இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டெடுத்த பெருமையும் பிரதமர் மோடியையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காகவும் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என பலதரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
யார் இந்த ஆஷ்லே டோஜே:
நோபல் அமைதிக்கான நோபல் பரிசை வழங்கும், நார்வேவை சேர்ந்த நோபல் குழுவின் துணைத் தலைவராக ஆஷ்லே டோஜே உள்ளார். இவர் ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழ்ந்து பணியாற்றிய அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் ஓஸ்லோ மற்றும் ட்ரோட்ம்சோ ஆகிய பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.