PM Modi Speech: நாடாளுமன்ற எம்.பிக்களின் எண்ணிக்கை உயரும் - புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு
வருங்காலத்தில் இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும் என புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி:
புதிய நாடாளுமன்ற கட்டடம் 1200 கோடி ரூபாய் செலவில், 18 ஏக்கர் அளவுக்கு அதாவது 64,500 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தன்னம்பிக்கையின் அடையாளமாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை, பிரதமர் மோடி காலையில் திறந்து வைத்தார்.
கணபதி ஹோமம்:
இதையொட்டி புதிய நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் இன்று காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் தமிழகத்தில் இருந்து சென்ற 21 ஆதினங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அங்கு செங்கோல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. அதன் மீது ஆதினங்கள் புனித நீர் தெளித்து வழிபாடு நடத்தினார்.
விழுந்து வணங்கிய பிரதமர் மோடி:
தொடர்ந்து, அதனை கையில் எடுப்பதற்கு முன்பாக, பிரதமர் மோடி சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கினார். பின்பு, ஆதினங்களின் புடைசூழ கையில் செங்கோலை ஏந்தி பிரதமர் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குள் சென்றார். அப்போது, தேவாரம் பாடல்கள் பாடப்பட்டன. பின்பு, மக்களவையில் உள்ள சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செங்கோல் வைக்கப்பட்டது.
12 மதகுருமார்கள் வழிபாடு:
தொடர்ந்து மதநல்லிணக்கத்தை உணர்த்தும் விதமாக இந்து, கிறிஸ்துவம், இஸ்லாமியம், ஜெயின் மற்றும் பவுத்த மதம் உள்ளிட்ட 12 மதங்களை சேர்ந்த குருமார்களின் வழிபாடும் நடத்தப்பட்டது. இதனிடையே, புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களை பிரதமர் மோடி கவுரவித்தார்.
75 ரூபாய் நாணயம் வெளியீடு:
அதைதொடர்ந்து, புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு மற்றும் 75வது சுந்திர தினத்தை குறிப்பிடும் விதமாக, பிற்பகலில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைத்து பிரதமர் மோடி 75 ரூபாய் நாணாயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
பிரதமர் மோடி உரை:
தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய நாடாளுமன்ற கட்டடம் என்பது 140 கோடி இந்தியர்களின் கனவின் பிரதிபலிப்பு . 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில், நாட்டிற்கு வழங்கப்படுள்ள பரிசு தான் புதிய நாடாளுமன்ற கட்டடம். பல ஆண்டுகால அந்நிய ஆட்சி நமது பெருமையை நம்மிடமிருந்து திருடிவிட்டது. இன்று, இந்தியா அந்த காலனித்துவ மனநிலையை விட்டுச் சென்றுவிட்டது. புதிய கட்டடம் ஆத்ம நிர்பார் பாரதம் திட்டத்தின் எழுச்சிக்கு நிறைவேற்றுவதற்கு ஒரு சாட்சியாக இருக்கும். இந்தியா முன்னேறும் போது, உலகம் முன்னேறும். இந்த புதிய நாடாளுமன்றம் இந்தியாவின் வளர்ச்சியின் மூலம் உலகின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
தமிழகத்தின் செங்கோல்:
ஒவ்வொரு தேசத்தின் வளர்ச்சிப் பயணத்திலும் அழியாத சில தருணங்கள் உள்ளன. இந்தியாவிற்கு அப்படிபட்ட ஒருநாள்தான் இன்று. மே 28ம் தேதி இந்திய வரலாற்றில் அழியாத நாளாக இருக்கும். செங்கோலுக்கு உரிய இடம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் இன்று நிறுவப்பட்டுள்ள செங்கோல் நீதி மற்றும் நல்லாட்சியின் அடையாளமாக உள்ளது. தமிழ்நாட்டின் செங்கோல் நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கம் அளிக்கும். ராஜாஜி மற்றும் ஆதீனத்தை சேர்ந்தவர்களின் பங்களிப்புடன் செங்கோல் உருவாக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும் - மோடி:
அதோடு, இந்தியாவில் வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும். அதன் காரணமாகவே கூடுதல் இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றம் அமைந்துள்ளது. எம்.பிக்கள் எண்ணிக்கை உயர்ந்தால் அவர்கள் எங்கே அமர்வார்கள் என்ற கேள்வியை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்தோம் எனவும் பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.