"மீனவர்களுக்கு சரியான நேரத்தில் வானிலை எச்சரிக்கை கிடைக்கிறது" பிரதமர் மோடி பெருமிதம்!
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஒத்துழைப்புடன் மீனவர்களுக்கு சரியான நேரத்தில் வானிலை எச்சரிக்கை தகவல் கிடைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150ஆவது நிறுவன தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், "இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150 ஆண்டுகள் ஆனது இத்துறையின் பயணத்தை மட்டுமல்ல, இந்தியாவின் நவீன அறிவியல், தொழில்நுட்பத்தின் பெருமைமிக்க பயணத்தையும் பிரதிபலிக்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஒன்றரை நூற்றாண்டுகளாக லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு சேவை செய்துள்ளது. இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்தின் அடையாளமாக மாறியுள்ளது" என்றார்.
IMDயின் 150 ஆண்டு விழா:
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சாதனைகள் குறித்த நினைவு அஞ்சல் தலையையும் நாணயத்தையும் வெளியிட்டு பேசிய பிரதமர், "மகர சங்கராந்தி பண்டிகைக் காலத்தில் 1875 ஜனவரி 15ஆம் தேதி, இந்திய வானிலை ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. இந்தியாவின் பாரம்பரியத்தில் மகர சங்கராந்தியின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம்" என்றார்.
குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் என்ற முறையில் தமக்கு மிகவும் பிடித்த பண்டிகை மகர சங்கராந்தி என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "ஒரு நாட்டின் அறிவியல் நிறுவனங்களின் முன்னேற்றம் அதன் அறிவியல் விழிப்புணர்வை பிரதிபலிக்கிறது.
அறிவியல் நிறுவனங்களில் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் புதிய இந்தியாவின் மனப்பான்மையுடன் ஒருங்கிணைந்தவை. கடந்த பத்து ஆண்டுகளில், ஐஎம்டி-யின் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் முன் எப்போதும் இல்லாத விரிவாக்கத்தைக் கண்டுள்ளது.
டாப்ளர் வானிலை ரேடார்கள், தானியங்கி வானிலை நிலையங்கள், ஓடுபாதை வானிலை கண்காணிப்பு அமைப்புகள், மாவட்ட வாரியான மழை கண்காணிப்பு நிலையங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி என்ன பேசினார்?
இவை அனைத்தும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் வானிலை ஆய்வு, விண்வெளி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் பெரிதும் பயனடைகிறது. அண்டார்டிகாவில் மைத்ரி, பாரதி ஆகிய பெயர்களில் இரண்டு வானிலை ஆய்வு மையங்கள் உள்ளன
நிலையான எதிர்காலம், எதிர்கால தயார்நிலைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அடையாளப்படுத்தும் வகையில், அனைத்து வானிலை நிலைமைகளுக்கும் நாடு தயாராக இருப்பதை உறுதி செய்து, சிறந்த பருவநிலைத் தகவல் தேசமாக மாறுவதை உறுதி செய்யும் வகையில் 'மிஷன் மவுசம்' எனப்படும் வானிலை இயக்கம் தொடங்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார்.
அறிவியலின் முன்னேற்றம் புதிய உயரங்களை எட்டுவதில் மட்டுமல்ல, சாதாரண மனிதனின் வாழ்க்கையை எளிதாக்குவதிலும் உள்ளது என்று பிரதமர் கூறினார். துல்லியமான வானிலை தகவல்கள் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம் இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த அளவுகோலில் முன்னேறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
'அனைவருக்கும் முன்கூட்டிய எச்சரிக்கை' என்ற முன்முயற்சி தற்போது 90% மக்களைச் சென்றடைகிறது. கடந்த, வரவிருக்கும் 10 நாட்களுக்கான வானிலை தகவல்களை யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் அணுகலாம் என்றும், முன்னறிவிப்புகள் வாட்ஸ்அப்பில் கூட கிடைக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
"மீனவர்களுக்கு சரியான நேரத்தில் வானிலை எச்சரிக்கை"
'மேகதூத் மொபைல் செயலி' அனைத்து உள்ளூர் மொழிகளிலும் வானிலை தகவல்களை வழங்குகிறது என்று அவர் கூறினார். 10 ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயிகள், கால்நடை உரிமையாளர்களில் 10% பேர் மட்டுமே வானிலை தொடர்பான ஆலோசனைகளைப் பயன்படுத்தினர் எனவும், ஆனால், இன்று இந்த எண்ணிக்கை 50%க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்றும் நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார்.
மொபைல் போன்களில் மின்னல் எச்சரிக்கை இப்போது சாத்தியமாகிறது என்று அவர் குறிப்பிட்டார். முன்பெல்லாம் மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது லட்சக்கணக்கான மீனவர்களின் குடும்பங்கள் கவலையடைந்ததாகவும், ஆனால் இப்போது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஒத்துழைப்புடன் மீனவர்களுக்கு சரியான நேரத்தில் வானிலை எச்சரிக்கை தகவல் விடுக்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த உடனடி தகவல்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு விவசாயம், நீலப் பொருளாதாரம் போன்ற துறைகளை வலுப்படுத்துகின்றன என்று அவர் மேலும் கூறினார்.