"தமிழ்நாட்டில் ராணுவ தளவாடம்.. பாதுகாப்பு துறையில் புதிய ஆற்றலை புகுத்து இருக்கிறது" பிரதமர் பாராட்டு!
உலகின் பெரிய விமான நிறுவனங்களுக்கு உதிரிப்பாகங்களை அதிக அளவில் வழங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) வளாகத்தில் சி-295 விமானங்களை உற்பத்தி செய்வதற்கான டாடா விமான வளாகத்தை பிரதமர் மோடியும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸும் இணைந்து இன்று தொடங்கி வைத்தனர்.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி சூழல் இன்று புதிய சிகரங்களை எட்டி வருகிறகு. 10 ஆண்டுகளுக்கு முன்பு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருந்திருந்தால், இன்று இந்த இலக்கை எட்டுவது சாத்தியமற்றதாக இருந்திருக்கும்" என்றார்.
"புதிய பாதையில் நடைபோடும் அரசு"
இந்தியாவுக்காக புதிய இலக்குகளை நிர்ணயித்து, புதிய பாதையில் நடைபோட அரசு முடிவு செய்துள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், அதன் பலன்கள் இன்றைக்கும் தெளிவாகத் தெரிகின்றன என்றார்.
பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் மாற்றம், சரியான திட்டம் மற்றும் கூட்டாண்மை எவ்வாறு வாய்ப்புகளை வளமாக மாற்றும் என்பதற்கு எடுத்துக்காட்டு என்று பிரதமர் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் துடிப்பான பாதுகாப்புத் துறையின் வளர்ச்சியை உத்திசார் முடிவுகள் தூண்டியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் தனியார் துறையின் பங்களிப்பை விரிவுபடுத்தியுள்ளோம், பொதுத்துறை நிறுவனங்களை மேலும் திறன்மிக்கதாக மாற்றியுள்ளோம், ஆயுதத் தொழிற்சாலைகளை ஏழு பெரிய நிறுவனங்களாக மறுசீரமைத்துள்ளோம் என பிரதமர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி என்ன பேசினார்?
தொடர்ந்து பேசிய பிரதமர், "டிஆர்டிஓ மற்றும் எச்ஏஎல் ஆகியவற்றுக்கு அதிகாரம் அளித்துள்ளோம் உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு வழித்தடங்களை அமைப்பது இத்துறைக்கு புதிய சக்தியை அளித்துள்ளது" என்றார்.
ஐடெக்ஸ் (பாதுகாப்பு சிறப்புக்கான கண்டுபிடிப்பு) திட்டத்தைக் குறிப்பிட்ட பிரதமர், கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் சுமார் 1,000 பாதுகாப்பு ஸ்டார்ட் அப்களின் வளர்ச்சிக்கு இது உந்துதல் அளித்துள்ளது என்றார். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், நாடு இப்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
திறன் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளித்ததாக தெரிவித்த பிரதமர், ஏர்பஸ்-டாடா தொழிற்சாலை போன்ற திட்டங்கள் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறினார்.
இந்தத் தொழிற்சாலை 18,000 விமானப் பாகங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு ஆதரவளிக்கும் என்றும், இந்தியா முழுவதும் உள்ள எம்.எஸ்.எம்.இ.களுக்கு மகத்தான வாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
இன்றும் கூட உலகின் பெரிய விமான நிறுவனங்களுக்கு உதிரிப்பாகங்களை அதிக அளவில் வழங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்று குறிப்பிட்ட மோடி , புதிய விமானத் தொழிற்சாலை இந்தியாவில் புதிய திறன்கள் மற்றும் புதிய தொழில்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று கூறினார்.