இந்த சர்டிபிகேட் வேணும்.. இல்லன்னா ’நோ எண்ட்ரி’ : பத்திரிகையாளர்களுக்கு கண்டிஷன் போட்ட அரசு..
இமாச்சல பிரதேச காவல்துறை தலைவர் சஞ்சய் குண்டுவும் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
சட்டத்தில் இல்லாத புதுப்புது விதிமுறைகளை அதிகாரத்தில் இருப்பவர்கள் போகிற போக்கில் பின்பற்றச் சொல்லிவிட்டுப் போவது ஒன்று இன்று நேற்று தொடங்கிய புதுக்கதை அல்ல. அந்த வகையில் இமாச்சலப் பிரதேசப் பத்திரிகையாளர்களை மாநில அரசு நற்சான்றிதழ் கொண்டுவரச் சொல்லியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை புதன்கிழமை அன்று பிரதமர் மோடி இமாச்சல பிரதேசம் வர இருப்பதை அடுத்து மாநில அரசு இந்தக் கட்டளையைப் பிறப்பித்திருந்தது. ஆனால் இது ஊடகங்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து செவ்வாய் அன்று இந்த அறிவிப்பை அரசு திரும்பப்பெற்றுக்கொண்டது.
செப்டம்பர் 29 தேதியிட்ட முதல் கடிதத்தில் அனைத்து பத்திரிகை எழுத்தாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வீடியோகிராஃபர்களின் பட்டியலையும் அவர்களின் நற்பண்பு சரிபார்ப்பு சான்றிதழுடன் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
அரசாங்கத்தால் நடத்தப்படும் தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் கூட இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அக்டோபர் 1ம் தேதிக்குள், பத்திரிகையாளர்கள் நேர்மறைச் சான்றிதழ்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். "பேரணி அல்லது கூட்டத்திற்குள் அவர்களை அனுமதிப்பது இந்தச் சான்றிதழை வைத்துதான் தீர்மானிக்கப்படும்" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே பிரச்னை அதிகரித்ததை அடுத்து பிலாஸ்பூர் காவல்துறை கண்காணிப்பாளர், மன்னிப்புக் கேட்டு செவ்வாய்க்கிழமை அன்று புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
“கடிதத்தை இந்த அலுவலகம் கவனக்குறைவாக வழங்கியது வருத்தமளிக்கிறது. அந்தக் கடிதம் திரும்பப் பெறப்படுகிறது” என்று அந்த அலுவலக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் நிகழ்வுக்கு அனைத்து ஊடகங்களும் ‘வரவேற்கப்படுகின்றன’ என்றும் அவற்றின் கவரேஜ் எளிதாக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஊடகப் பிரிவினால் பரிந்துரைக்கப்படும் அனைவருக்கும் அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என புதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேச காவல்துறை தலைவர் சஞ்சய் குண்டுவும் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
“அக்டோபர் 5, 2022 அன்று மாண்புமிகு பிரதமரின் இமாச்சலப் பிரதேச பயணத்தை செய்தியாக்க அனைத்து பத்திரிகையாளர்களும் மிகவும் வரவேற்கப்படுகிறார்கள். ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் வருந்துகிறேன்” என்று அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் அரசின் இந்த விசித்திரமான கோரிக்கைக்கு அதிக கவனம் செலுத்தியதல் , விரைவில் இது திரும்பப் பெற வழிவகுத்தது. ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர் பங்கஜ் பண்டிட் இதுகுறித்துக் கூறுகையில் தனது 22 ஆண்டு கால இதழியல் வாழ்க்கையில் இதுபோன்ற அபத்தமான கோரிக்கையை பார்ப்பது இதுவே முதல் முறை என்று போலீஸ் அறிவிப்புக்கு பதிலளித்தார்.
ஹிமாச்சல் காங்கிரஸ் கமிட்டியின் முதன்மை செய்தித் தொடர்பாளர் நரேஷ் சவுகான், நிர்வாகத்தின் கோரிக்கையை கண்டித்து, இது பத்திரிகை சுதந்திரத்தை மீறுவதாகக் கூறினார்.
இமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூரில் எய்ம்ஸ் வளாகத்தை திறந்து வைப்பதுடன், அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். குலுவில் நடைபெறும் தசரா விழாக்களிலும் அவர் பங்கேற்பார் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.